1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : வியாழன், 2 ஜூலை 2015 (16:30 IST)

அடிக்கிறார், சந்தேகப்படுகிறார்... மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்கும் நடிகர் கிருஷ்ணா

திருமணமாகி 16 மாதங்களே ஆன நிலையில், தனது மனைவி தன்மீது சந்தேகப்படுவதாகவும், அடித்து ரத்தக் காயம் ஏற்படுத்தியதாகவும், மனரீதியாக டார்ச்சர் செய்வதாகவும் கூறி விவாகரத்து வழக்கு தொடர்ந்திருக்கிறார் நடிகர், கிருஷ்ணா.
கழுகு உள்பட பல படங்களில் நடித்த கிருஷ்ணா, தயாரிப்பாளர் பட்டியல் சேகரின் மகன். இயக்குனர் விஷ்ணுவர்தனின் தம்பி. இப்போது அவர் யட்சன் படத்தில் நடித்து வருகிறார்.
 
இவருக்கும், கோவை மாவட்டம், பி.புளியம்பட்டியை சேர்ந்த ஹேமலதாவுக்கும், கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 6-ந்தேதி மேட்டுப்பாளையத்தில் திருமணம் நடந்தது. திருமணமாகி 16 மாதங்களே ஆன நிலையில், தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் கிருஷ்ணா வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது - 
 
ஹேமலதாவும், நானும் காதலித்து, பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டோம். திருமணத்துக்கு பின்னர் வடபழனியில் வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தினோம். ஹேமலதா மனைவிக்குரிய கடமைகளை செய்யாமல், தேவையில்லாமல் என்னுடன் தகராறு செய்து வந்தார். அவரது சந்தேகபுத்தியினால் நடிப்புத் தொழிலில் என் மனதை செலுத்த முடியவில்லை. 
 
வாழ்க்கையின் உண்மை நிலையை அவர் புரிந்து கொள்ளவில்லை. ஆடம்பரமான வாழ்க்கை நான் அவருக்கு செய்து கொடுப்பேன் என்று நினைக்கிறார். இதற்காக என்னை உடலாலும், மனதாலும் சித்ரவதை செய்தார். இதனால், சில நேரங்களில் எனக்கு ரத்தக்காயங்கள் ஏற்பட்டது. அவருடன் வாழ்ந்த 14 மாதங்களும், எனக்கு மனரீதியான பல கொடுமைகளை செய்தார். 
 
என் மனைவி வேலைக்கு சென்று சம்பாத்தியம் செய்தாலும், அவருக்கு தேவையான அனைத்து செலவுகளையும் நானே செய்தேன். சினிமா படப்பிடிப்பு முடிந்து இரவில் வீட்டுக்கு வரும்போது கதவை திறக்க மாட்டார். இதனால் பல இரவுகள் நண்பர்களது வீட்டில் தங்கியிருக்கிறேன். இதற்கிடையில், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் என்மீது ஹேமலதா புகார் செய்தார். 
 
அப்போது நடந்த கவுன்சிலிங்கில், ஹேமலதா சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று தெரியவந்தது. கடந்த மார்ச் மாதம் முதல் அவரைவிட்டு பிரிந்து நான் தனியாக வசித்து வருகிறேன். கடந்த 18-ந்தேதி கோவை மாவட்ட போலீசார் எனக்கு போன் செய்து, என் மீது ஹேமலதா வரதட்சணை புகார் கொடுத்துள்ளதாகவும், விசாரணைக்கு நேரில் வரவேண்டும் என்றும் கூறினார் கள். திருமணத்தின்போது ஹேமலதா பெற்றோரிடம் வரதட்சணை எதுவும் நாங்கள் கேட்கவில்லை. 
 
திருமணச்செலவுகள் அனைத்தையும் எனது பெற்றோர்தான் செய்தனர். ஆனால், என்னை துன்புறுத்தவேண்டும் என்பதற்காக சென்னையில் வசிக்கும் ஹேமலதா கோவை மாவட்ட போலீசில் என் மீது பொய் புகார் செய்துள்ளார். என்னை பல்வேறு வழிகளில் துன்புறுத்தும் அவருடன் இனி சேர்ந்து வாழ முடியாத நிலையில் உள்ளேன். எனவே கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 6-ந்தேதி நடந்த எங்களது திருமணத்தை செல்லாது என்று அறிவிக்கவேண்டும். 
 
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.