வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: வியாழன், 26 நவம்பர் 2015 (13:35 IST)

அமீர் கானை அறைபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு - வெறுப்பை உமிழும் சிவசேனா

இந்தியாவில் பாதுகாப்பற்ற சூழலை அவ்வப்போது மக்கள் அனுபவப்படுகிறார்கள் என்று கருத்து தெரிவித்ததற்காக நடிகர் அமீர் கானை எதிர்த்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன இந்து அமைப்புகளும், பாஜகவினரும்.


 


இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது என்ற அமீர் கானின் கருத்தை பிரதிபலிப்பதாக உள்ளன, அவரை எதிர்த்து நடக்கும் போராட்டங்கள்.
 
அமீர் கான் தற்போது டங்கல் படத்தின் படப்பிடிப்பிற்காக பஞ்சாப் சென்றுள்ளார். அங்கு லூதியானா நகரில் உள்ள ராடிசன் ப்ளூ ஓட்டலில் அவர் தங்கியுள்ளார். அந்த ஹோட்டலை முற்றுகையிட்ட சிவசேனா அமைப்பினர் அமீர் கானை கொச்சையான வார்த்தைகளில் விமர்சனம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய பஞ்சாப் மாநில சிவசேனா தலைவர் ராஜீன் தன்டன், அமீர் கானை அறைபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு தருவதாக அறிவித்துள்ளார். "வீரம் நிறைந்த தேசப்பற்று மிக்கவர்களுக்கு அமீர் கானை அறையும் ஒவ்வொரு அறைக்கும் 1 லட்ச ரூபாய் பரிசு தரப்படும்” என்று அறிவித்துள்ளார்.
 
இந்தியாவில் பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது என்று சொன்னதற்காக அமீர் கான் மீது தேசத்துரோக வழக்கு போடப்படும் நிலையில், ஒருவரை அடிக்க ஒரு லட்சம் தருகிறோம் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கும் கூலிப்படைத் தலைவன் தன்டனுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததோடு, அவன் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லை.
 
இந்துமத அடிப்படைவாதிகளால் இந்தியாவே கெட்டு குட்டிச்சுவராகிக் கொண்டிருப்பதை தன்டன் போன்ற பயங்கரவாதிகள் தங்களின் செயல்களால் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.