1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Modified: வெள்ளி, 21 நவம்பர் 2014 (10:12 IST)

இனிமேல் விடப்போவதில்லை - சரத்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எதிராக முண்டா தட்டும் விஷால்

நடிகர் சங்கத்தைப் பற்றி தொடர்ந்து அவதூறாக பேசினால் விஷாலை சங்கத்தைவிட்டே நீக்குவோம் என்று சரத்குமார் பேசியது பிரச்சனையின் வாலை திருகிவிட்டுள்ளது. அதுவரை பொறுமையாக இருந்த விஷால், இதுதான் நேரம் என்று விஸ்வரூபத்தை காட்ட ஆரம்பித்துள்ளார்.
 
நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் சத்யம் குழுமத்துடன் இணைந்து கட்டடம் கட்ட நடிகர் சங்கம் ஒப்பந்தம் போட்டதுதான் பிரச்சனைக்கு பிள்ளையார்சுழி போட்டது.
 
விஷால் போன்ற இளம் நடிகர்களும், நாசர், ராஜேஷ் போன்ற மூத்த கலைஞர்களும், நமக்கு சொந்தமான இடத்தில் நாமே கட்டடம் கட்டுவோம் என்கிறார்கள். சத்யம் குழுமம் உள்ளே நுழைந்தால் கட்டடத்தின் ஒருபகுதிதான் சங்கத்துக்கு சொந்தமாக இருக்கும் என்பது அவர்களின் வாதம்.
 
இந்நிலையில், கடந்தமுறை நடந்த பொதுக்குழுவில் ஜனவரியில் வழக்கு முடிந்துவிடும் உடனே கட்டடம் கட்டுவோம் என்றார் சரத்குமார். விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதற்கு எந்த மறுப்பும் கூறவில்லை. மாறாக, இளம் நடிகர்கள் இலவசமாக ஒரு படத்தில் நடித்துத் தருகிறோம், அந்தப் பணத்தை கட்டடம் கட்ட பயன்படுத்தலாம் என்றனர்.
 
சரத்குமார், ராதாரவி, காளை போன்றவர்களுக்கு இளம் நடிகர்கள் தங்களின் அதிகாரத்தை கேள்வி கேட்பது சற்றும் பிடிக்கவில்லை. விஷாலை ராதாரவியும் காளையும் நாய் என்று வெளிப்படையாகவே திட்டினர்.
 
சங்க உறுப்பினர்களை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசினார் என்றுதான் குமரிமுத்துவை சங்கத்தைவிட்டு நீக்கினார்கள். அப்படியானால் ராதாரவி, காளையை சங்கத்தை விட்டு நீக்காமல் என்னை நீக்குவேன் என்பது என்ன நியாயம்? அப்படி என்னை நீக்குவதற்கு நான் என்ன தப்பு செய்தேன் என்பதை சொல்லட்டும் என்கிறார் விஷால்.
 
காளை தன்னை நாய் என்று திட்டுவதற்கு முதல் நாள்வரை சங்க தேர்தலில் நிற்கும் எண்ணம் தனக்கு இல்லையென்றும், ஆனால் இனி விடப்போவதில்லை, தேர்தலில் நான் மட்டுமில்லை நாசர், பொன்வண்ணன், ராஜேஷ் போன்ற மூத்த நடிகர்களும் நிற்பார்கள் என கூறியுள்ளார்.
 
கட்டடத்துக்கு பூமி பூஜையே போடவில்லை. அதற்குள் நாலு வருடத்தில் 170 கோடி லாபம் கிடைக்கும் என்று கணக்கு சொல்கிறார் சரத்குமார் என காட்டமாக விமர்சித்தும் உள்ளார்.
 
நாம் நேற்று சொன்னது போல் நடிகர் சங்கத்தின் ஆக்ஷன் ப்ளாக் ஆரம்பித்துவிட்டது. இனி ஒரே அடிதடிதான்.