1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 21 நவம்பர் 2014 (16:46 IST)

ஓட்டலில் 4 நாட்கள் தங்கவைத்து 2 மாணவிகளை கற்பழித்த கல்லூரி மாணவர் கைது

தர்மபுரியில் இருந்து சிதம்பரத்துக்கு அழைத்து வந்து ஓட்டலில் 4 நாட்கள் தங்க வைத்து மாணவிகள் 2 பேரை கற்பழித்த மாணவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 
தர்மபுரி அரசுக் கல்லூரியில் சக்திவேல் என்பவர் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் படிக்கும் மாணவிகள் இருவர் இவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். இதற்கிடையில், சக்திவேல் அந்த மாணவிகளிடம், தனக்கு இந்திய ராணுவத்தில் வேலை கிடைத்து உள்ளது என்றும் எனவே சிதம்பரம் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வரலாம் என்றும் கூறியுள்ளார். இதனால் சக்திவேல் மற்றும் 2 மாணவிகளும் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
 
அவர்கள் 3 பேரும் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுள்ளனர். அதன்பிறகு சிதம்பரத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்குச் சேர்ந்து சுற்றியுள்ளனர். பின்னர் இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டதால் சிதம்பரத்தில் தங்கிவிட்டு காலை தர்மபுரிக்கு செல்லலாம் என்று சக்திவேல் கூறியுள்ளார். இதையடுத்து அவர் அங்குள்ள ஒரு ஓட்டலில் 2 அறைகள் வாடகைக்கு எடுத்து அதில் மாணவிகள் 2 பேரையும் தனித்தனியாக தங்க வைத்துள்ளார்.
 
பின்னர் சக்திவேல் மாணவிகள் 2 பேரின் அறைக்கும் மாறி, மாறி சென்று ஆசை வார்த்தைகள் கூறி இணங்க வைத்துள்ளார். மேலும், அவர் மாணவிகளை ஏமாற்றி அங்கேயே 4 நாட்கள் தங்க வைத்து மீண்டும், மீண்டும் உறவு கொண்டுள்ளார். மேலும் சக்திவேலிடமிருந்த பணம் செலவழிந்து விட்டதால் மாணவிகளிடம் இருந்த பொருட்களை வாங்கி அவற்றை அடகு வைத்து செலவு செய்துள்ளார்.
 
இந்நிலையில் அவர்கள் 3 பேரும் சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர். பெற்றோர்கள் கேட்டால் என்ன சொல்வதென்று  மாணவிகள் 2 பேரும் பயந்துள்ளனர். இதனால் சக்திவேல் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலத் திட்ட ஒருங்கிணைப்பாளர் வீட்டிற்கு அந்த மாணவிகளை அழைத்துச் சென்றுள்ளார்.
 
அவர் அந்த மாணவிகளிடம் விசாரித்தபோது, அவர்கள் நடந்த நிகழ்ச்சிகளைக் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஒருங்கிணைப்பாளர் இதுகுறித்து தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
 
அதன்பேரில் மாணவர் சக்திவேல் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் காவல்துறையினர் மாணவிகள் 2 பேருக்கும் அறிவுரை கூறி அவர்களது பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர்.