வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : திங்கள், 23 ஜூன் 2014 (12:25 IST)

இயக்குனர் இராம.நாராயணன் மரணம் - செவ்வாய்க்கிழமை இறுதிச்சடங்கு

பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான இராம.நாராயணன் நேற்றிரவு சிறுநீரகக் கோளாறு காரணமாக மரணமடைந்தார். நாளை அவரது இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
 
இராம.நாராயணன் இந்தியாவின் சாதனை இயக்குனர்களில் ஒருவர். 1981-ல் சுமை படத்தின் மூலம் இயக்குனரான அவர் இதுவரை 125 படங்கள் இயக்கியுள்ளார். இதுவொரு சாதனை. மேலும் ஒரியா, போஜ்புரி, மராத்தி, மலாய், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, வங்காளி என ஒன்பது மொழிகளில் படங்கள் இயக்கியுள்ளார்.
 
ஆரம்பத்தில் கம்யூனிசம் சார்பான படங்களை இயக்கியவர், அதற்கான சந்தை தமிழகத்தில் குறைவு என்பதை அறிந்ததும் ஆன்மீகத்தின் பக்கம் சாய ஆரம்பித்தார். அவர் இயக்கிய ஆடிவெள்ளி, ராஜ காளியம்மன் போன்ற படங்கள் வசூல் சாதனை படைத்தவை. குழந்தைகளையும், மிருகங்களையும் வைத்து அவர் எடுத்தப் படங்கள் தமிழ் சினிமாவில் ஒரு தனி வகைமையை உருவாக்கியது எனலாம். டப்பிங் படங்களிலும் அவரது நிறுவனம் சாதனை படைத்தது. எந்தப் படம் ரசிகர்களை கவரும் என்பதை கணிப்பதில் வல்லவர். அருந்ததி படத்தின் தமிழ் டப்பிங்கை அவர்தான் வெளியிட்டார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படமும் அவரது தயாரிப்பே.
 
காரைக்குடியில் பிறந்த இராம.நாராயணன் பாடல்கள் எழுதுவதற்காகவே திரைத்துறைக்கு வந்தார். பிறகு கதாசிரியராக மாறினார். அவரும் அவரது நண்பர் எம்.ஏ.காஜாவும் ராம் - ரஹிம் என்ற பெயரில் கதைகள் எழுதினர். 1976-ல் அவர் ஆசை அறுபதுநாள் படத்தின் கதை, திரைக்கதை வசனத்தை எழுதினார். அடுத்த வருடமே மீனாட்சி குங்குமம் என்ற படத்தை தயாரித்தார்.
 
இராம.நாராயணன் தீவிர திமுக அனுதாபி. 1989-ல் காரைக்குடியிலிருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராகவும் செயல்பட்டார். கடந்த ஆட்சியில் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக செயல்பட்டவர் ஆட்சி மாறியதும் பதவியை ராஜினாமா செய்து கட்சி மற்றும் சங்க நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கிக் கொண்டார்.
 
இரா.நாராயணனுக்கு சிறுநீரகக்கோளாறு இருந்தது. அதற்கான சிகிச்சையை சிங்கப்பூரில் எடுத்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு நாளை இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது.