வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha priya
Last Updated : புதன், 25 ஜூன் 2014 (13:26 IST)

எந்திரன் 2 - ரஜினி இஷ்டப்பட்டாலும் கஷ்டப்பட முடியாது

ரஜினிக்கும், ஷங்கருக்கும் மட்டுமின்றி தமிழ் சினிமா வர்த்தகத்துக்கும் மைல்கல்லாக அமைந்த படம் எந்திரன். விஞ்ஞானி, ரோபோ என ரஜினி இரு வேடங்களில் நடித்த இப்படம் 150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்தது. படத்தில் வெளிநாட்டு அனிமேஷன் நிறுவனங்கள் மேற்கொண்ட சில கிராபிக்ஸ் காட்சிகள் மிரட்டுவதாக இருந்தது.  

எந்திரன் 2 -ம் பாகத்தை எடுக்க ஷங்கர் ஆர்வமுடன் இருக்கிறார். படத்தில் நடிக்க ரஜினிக்கும் விருப்பம் உள்ளது. ஆனால் அவரது உடல்நிலை ஒத்துக் கொள்ளுமா?
 
ராணா படத்தின் முதல்நாள் ஷுட்டிங்கின் போது ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் இருந்த அவரை சிங்கப்பூருக்கு கொண்டு சென்று மருத்துவம் பார்த்தனர். உடல்நிலை தேறினாலும் பொது இடங்களில் அதிக நேரத்தை செலவிடக் கூடாது, உடம்பை வருத்தக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். 
கோச்சடையான் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் தயாரான படம் என்பதால் சண்டைக் காட்சிகளையெல்லாம் ரஜினி இல்லாமலே எடுத்தனர். லிங்காவிலும் ரஜினியின் உடலை வருத்தாதபடிதான் காட்சிகள் வைத்துள்ளார் கே.எஸ்.ரவிக்குமார். ஆனால் எந்திரன் 2 -ம் பாகத்தை இந்த இரு படங்களைப் போல எடுத்துவிட முடியாது. எந்திரன் 2 அனிமேஷன் படம் கிடையாது என்பதுடன் சண்டைக் காட்சிகள் இல்லாமல் எந்திரன் 2 -வை எடுப்பது முனியாண்டிவிலாஸில் தயிர் சாதம் சாப்பிடுவதைப் போல. 
 
எந்திரன் 2 -ம் பாகத்தில் நடிக்க ரஜினி இஷ்டப்பட்டாலும் அவரால் கஷ்டப்பட முடியாது என்பதே நிலைமை. அதனால் எந்திரன் 2 -வில் ரஜினி நடிப்பது கேள்விக்குள்ளாகியுள்ளது.