வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 26 மே 2015 (18:57 IST)

லிங்கா நஷ்டஈடு விவகாரம் - மீண்டும் போராடப் போவதாக விநியோகஸ்தர்கள் அறிவிப்பு

லிங்கா படத்தால் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி, சில விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் போராட்டம் நடத்தினர். பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரஜினி தரப்பிலிருந்து 12.50 கோடிகள் நஷ்டஈடாக தருவது என முடிவானது. அதனை பிரித்துக் கொடுக்கும் பொறுப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தாணு, விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் ஆகியோர் பொறுப்பில் விடப்பட்டது.
 
12.50 கோடியில் 5.89 கோடியை மட்டும், போராட்டத்தை முன்னின்று நடத்திய சிங்காரவேலனும் வேறு சிலரும் பிரித்துக் கொண்டனர். மற்றவர்களுக்கு மீதமுள்ள 6.61 கோடிகள் இன்னும் வந்து சேரவில்லை. தாணுவிடம் கேட்டால் திருப்பூர் சுப்பிரமணியத்தை கை காட்டுகிறார். அவரிடம் கேட்டால் மதுரை அன்புவிடம் கேளுங்கள் என்கிறார். இந்த விஷயத்தில் நாங்கள் நம்ப வைத்து ஏமாற்றப்பட்டோம் என்கிறார்கள் விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும்.
 
லிங்கா நஷ்டஈடாக 33 கோடி ரூபாய் முதலில் கேட்கப்பட்டது. 12.50 கோடி வாங்கிக் கொள்ளுங்கள். மீதமுள்ளதை, ரஜினி வேந்தர் மூவிஸுக்கு நடித்துத் தரும் படத்தில் கழித்துக் கொள்ளலாம் என உறுதி தந்திருக்கிறார்கள். ஆனால், ரஜினி இப்போது வேந்தர் மூவிஸை தவிர்த்து தாணுவுக்கு படம் நடித்துத் தருகிறார். 
 
மேலும், வேந்தர் மூவிஸுக்கு லிங்கா விநியோகஸ்தர்கள் தரவேண்டிய பாக்கி பணத்துக்காக அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. அவற்றையெல்லாம் பட்டியலிட்ட விநியோகஸ்தர்கள், 12.50 கோடியில் மீதமுள்ள பணத்தை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக வழங்க வேண்டும், நஷ்டத்தை ஈடுசெய்ய வேந்தர் மூவிஸுக்கு ரஜினி படம் நடித்துத்தர வேண்டும், வழக்கை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
 
இதில் தீர்வு ஏற்படவில்லை எனில் அடுத்தக்கட்ட போராட்டத்தை தொடங்குவது என முடிவு செய்துள்ளனர்.