வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 15 செப்டம்பர் 2015 (16:52 IST)

அடுத்தப் படம் அடல்ஸ் ஒன்லிதான் - கோபமான மிஷ்கின்

படமெடுக்கிறாரோ இல்லையோ, மைக் கிடைத்தால் படபடவென பொரிந்து தள்ளுவார் மிஷ்கின். அவலை எதிர்பார்த்து செல்கிறவர்களுக்கு அன்லிமிடெட் மீல்ஸே பாரிமாறுவார் தனது பேச்சில்.
 

 
தற்காப்பு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று காலை சென்னை கமலா திரையரங்கில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களில் ஒருவர் மிஷ்கின். எண்ணையில்லாமலே சென்சாரை கடுகு தாளித்தார் தனது பேச்சில்.
 
இயக்குனர் தனது கற்பனையில் உதித்த சிந்தனைகளைதான் படமாக எடுக்கிறார். அந்தப் படம் குடும்பத்தோடு பார்க்கிற மாதிரி இல்லை, குழந்தைகள் பார்க்கிற மாதிரி இல்லை என்று சென்சார் தடுப்பது, அந்தப் படைப்பாளியின் சுதந்திரத்தை பறிப்பது. அது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. ஒருத்தனை கெட்ட வார்த்தையில் திட்ட வேண்டுமென்றால் திட்டத்தான் வேண்டும். கொஞ்ச முடியாது. 
 
ஒருவன் கெட்ட வார்த்தை பேசாமலும் முத்தக்காட்சி இல்லாமலும் வாழவே முடியாது. அப்படிப்பட்டதைத்தான் ஒரு இயக்குனர் தன்னுடைய படத்தில் பதிவு செய்கிறான். அதுமாதிரி இல்லாமல் படம் எடுத்தால் அது ரசிகனை ஏமாற்றுவதுபோல் ஆகிவிடும். ரசிகனை ஏமாற்றிவிட்டு நாம் வெற்றி பெற நினைத்தால் அது முடியவே முடியாது. 
 
என்னுடைய அடுத்த படத்தை ஏ சான்றிதழ் வரும்படிதான் எடுக்கப் போகிறேன். என்னுடைய படத்தை பெண்களும் பார்க்க வேண்டாம் குழந்தைகளும் பார்க்கவேண்டாம். அடல்ட்ஸ் ஒன்லி மட்டும் பார்த்தால் போதும் என்றார் முத்தாய்ப்பாக.
 
எப்போ சார் படம் வரும்?