செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 29 ஜூலை 2015 (10:33 IST)

விஷால் அணியினருக்கு இரண்டாவது வெற்றி - ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நடிகர் சங்க தேர்தல்

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்துக்கு ஜுலை 15 தேர்தல் நடத்தயிருப்பதாக சரத்குமார் தலைமையிலான அணி அறிவித்திருந்தது. தேர்தலை நடத்த இரு வழக்கறிஞர்களை அவர்களே நியமித்தனர்.
ஜுலை 15 வாரநாள் என்பதால் அனைவராலும் வாக்கு அளிக்க முடியாது, தேர்தலை விடுமுறை நாளில் நடத்த வேண்டும், சங்க தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ளவர்களின் பட்டியலை தர வேண்டும், வழக்கறிஞர்களுக்குப் பதில், ஓய்வு பெற்ற நீதிபதியை வைத்து தேர்தல் நடத்த வேண்டும் என பல கோரிக்கைகளுடன் விஷால் தரப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதனை விசாரித்த நீதிபதி தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். அதனை எதிர்த்து சங்கத்தின் செயலாளர் ராதாரவி மேல்முறையீடு செய்தார்.
 
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின் நீதிபதிகள் கீழ்கண்டவாறு உத்தரவு பிறப்பித்தனர்.
 
தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகி தேர்தலை நடத்தும் அதிகாரியாக, ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி இ.பத்மநாபன் நியமிக்கப்படுகிறார். இவர், தேர்தல் தேதியை அறிவித்து, தேர்தலை நடத்தி, அதன் முடிவுகளையும் வெளியிட வேண்டும். இதற்காக தேவையான அனைத்து ஆவணங்களையும், நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளரிடம் இருந்து நீதிபதி பெற்றுக்கொள்ளலாம். விசாரணையை வருகிற அக்டோபர் 9-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.
 
- தேர்தலுக்கு தடை வாங்கியது விஷால் தரப்பின் முதல் வெற்றி என்றால், ஓய்வு பெற்ற நீதிபதி தேர்தலை நடத்தயிருப்பது இரண்டாவது வெற்றி. தேர்தலிலும் இந்த வெற்றி தொடருமா?