1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : வெள்ளி, 9 அக்டோபர் 2015 (12:27 IST)

மெட்ரோ ரயிலில் படப்பிடிப்பு நடத்த கட்டணம் மற்றும் கட்டுப்பாடுகள்

சென்னை கோயம்போடு, ஆலந்தூர் இடையே இயக்கப்படும் மெட்ரோ ரயிலில் படப்பிடிப்பு நடத்த எவ்வளவு கட்டணம்? கட்டுப்பாடுகள் என்னென்ன என்பதை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.



 

 
* மெட்ரோ ரயில் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் சினிமா படப்பிடிப்பு நடத்தலாம். காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படும்.
 
* ஒரு மணி நேரத்திற்கு ரூ.4 லட்சம் கட்டணம் ஆகும். கூடுதல் நேரமானது 15 நிமிடங்கள் என்ற அளவில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
 
* படப்பிடிப்புக்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். மெட்ரோ ரயில் அல்லது மெட்ரோ ரயில் நிலையங்களில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றால், டெபாசிட் தொகையாக ரூ.12 லட்சம் செலுத்த வேண்டும். இரண்டிலும் படப்பிடிப்பு நடத்தினால் ரூ.15 லட்சம் டெபாசிட் தொகை ஆகும்.
 
* சினிமா படப்பிடிப்புக்கு தனியாக மெட்ரோ ரயில் வழங்கப்படமாட்டாது. படப்பிடிப்பின்போது குறைந்த அளவு ஆட்களே உடன் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், படப்பிடிப்பு உபகரணங்களை ஒரு மணி நேரத்திற்கு முன்பாக ரயில் நிலையத்திற்கு எடுத்துச் செல்லலாம். அதற்கு என்று தனி கட்டணம் கிடையாது.
 
* படப்பிடிப்பின்போது, மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் ஏதாவது சேதம் ஏற்பட்டால், அதற்கு படப்பிடிப்பு குழுவினரே பொறுப்பாவார்கள். அதற்கான கட்டணம் டெபாசிட் தொகையில் இருந்து கழிக்கப்படும்.
 
* சினிமா படப்பிடிப்பு நடத்த முடியாத நிலை ஏற்படும்போது, அதை 7 நாட்களுக்கு முன்பு தெரிவித்தால் டெபாசிட் தொகையில் இருந்து 75 சதவீதமும், 5 நாட்களுக்கு முன்பு தெரிவித்தால் 50 சதவீதமும், 3 நாட்களுக்கு முன்பு தெரிவித்தால் 25 சதவீதமும் திரும்ப தரப்படும். அதற்கும் குறைவான நாட்களில் தகவல் தெரிவித்தால் டெபாசிட் தொகை எதுவும் திரும்ப தரப்படமாட்டாது.
 
* சினிமா படப்பிடிப்புக்கு விண்ணப்பிப்பவர்கள், துணை பொது மேலாளர், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் தலைமை அலுவலகம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு, சென்னை - 107 என்ற முகவரிக்கு அனுப்பவும். இதற்கான விண்ணப்பம் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
இந்த கட்டணம் மற்றும் கட்டுப்பாடுக்கு, பேசாமல், மெட்ரோ ரயிலில் படப்பிடிப்பு நடத்த அனுமதி இல்லை என்று அறிவித்திருக்கலாம்.