வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : வியாழன், 28 மே 2015 (14:09 IST)

தாணு வாய்ச் சொல் வீரர், திருப்பூர் சுப்பிரமணி பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் - சிங்காரவேலன் கடும் தாக்கு

கடந்த சில தினங்களாக, லிங்கா பிரச்சனையில் தாணு, திருப்பூர் சுப்பிரமணியம் மற்றும் சிங்காரவேலன் மூவரும் மோதிக் கொள்ளும் அறிக்கையையோ, பேட்டியையோ வாசித்தபடிதான் சூரியன் கிழக்கே உதிக்கிறான். கன்னித்தீவெல்லாம் கந்தலாகிற அளவுக்கு போகிறது பிரச்சனை. 
 
சிங்காரவேலன் மீது தாணு, திருப்பூர் சுப்பிரமணியம் ஆகியோர் வைத்த குற்றச்சாட்டுக்கு அவர் நீண்ட அறிக்கையை பதிலாக தந்துள்ளார்.
 
முதல் அட்டாக் தாணு.
 
லிங்கா வெளியீட்டின் மூலம் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு 37.5 கோடி ரூபாய் ஆகும். இழப்பீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் சுமுகமான உடன்பாடு ஏற்பட்டு, டெபாசிட் அடிப்படையில் படம் திரையிட்டவர்களுக்கு கொடுப்பதற்காக 12.5 கோடியும், ரஜினிகாந்த் படம் நடித்து தருவார் என்று உறுதியும் கூறியதால் ஒத்துக் கொண்டு பணத்தை பெற்றுக் கொள்வது என முடிவெடுத்தேன்.
 
அதன் அடிப்படையில் மார்ச் 20 -ஆம் தேதி அந்த பணம் தங்கள் வசம் வந்துவிட்டதாக கலைப்புலி தாணு மீடியாவிலும் தெரிவித்தார். அன்று இரவே விநியோகஸ்தர்கள் சிலருக்கு முன்பணமாக தலா ரூபாய் 35 லட்சம் தருவதாக உறுதி கூறப்பட்டு அவ்வாறு கொடுக்கவும்பட்டது. ஆனால் எஞ்சிய தொகை பல நாட்களுக்கு பிறகு, மிகுந்த அழுத்தத்திற்கு பின்னர் வழங்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் அந்தத் தொகை எங்கு சென்றது என்பதை தாணு விளக்க வேண்டும்
 
4 ஏரியாக்களுக்கு மட்டும் பணத்தை கொடுத்துவிட்டு மீதி ஏரியாக்களுக்கு பொய்யான காரணம் கூறி பணம் கொடுப்பதை இழுத்தடிப்பது ஏன் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
 
திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் இணைந்து வந்து பணத்தை பெற வேண்டும் என்று கூறும் தாணு, 4 ஏரியாக்களுக்கு பணம் கொடுத்தபோது அந்த விதியை பின்பற்றாதது ஏன் என்பதை தெரிவிக்க வேண்டும்.
 
விளம்பரத்திற்காக சிங்காரவேலன் பத்திரிகையாளர்களை சந்திப்பதாக கூறும் தாணு ஒரு விளம்பர பிரியர், வாய்ச்சொல் வீரர் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடமை எனக்கு இருப்பதால் ஒரு நிகழ்வை கூற கடமைப்பட்டுள்ளேன்.
 
2009 -ம் ஆண்டு அவர் தயாரித்த கந்தசாமி பட வெளியீட்டின்போது பேசிய தாணு, தான் ஒரு கிராமத்தை தத்தெடுத்து இருப்பதாகவும், அந்த கிராமத்திற்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை செய்து தருவதாகவும், அந்த கிராமத்தில் அமைந்துள்ள தன்னுடைய திருமண மண்டபத்தில் ஏழைகள் இலவசமாக திருமணம் நடத்தக் கொள்ளலாம் எனவும் அறிவித்திருந்தார்.
 
இந்த 6 வருட காலத்தில் அந்த கிராமத்திற்கு இவர் என்னென்ன உதவிகள் செய்துள்ளார் என்பதையும், எத்தனை ஏழை ஜோடிகளுக்கு அங்கு இலவச திருமணம் நடத்திக் கொள்ள அனுமதி அளித்தார் என்பதையும் தெரிவித்தால் அடியேனும் சந்தோஷப்படுவேன் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
 
தலைவலியும் நோவும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள். ஆளவந்தான் படத்தில் இழப்பு ஏற்பட்டபோது ஆளவந்தான் என்னை அழிக்க வந்தான் என்று பத்திரிகைகளில் நீங்கள் பேட்டி கொடுத்ததைபோல லிங்காவில் இழப்பு ஏற்பட்டதற்கு மீடியாவின் துணையை நாங்கள் நாடுவது உங்களுக்கு ஏன் வருத்தத்தை தருகிறது?
 
லிங்கா விவகாரத்தில் கணக்கு வாங்கியது முதல் பணம் செட்டில் செய்வது வரை திருப்பூர் சுப்பிரமணி ஈடுபட்டிருக்கும் நிலையில், அவருக்கும் எங்களுக்கும் நடந்து வரும் பிரச்சனையில் மரியாதைக்குரிய தாணு தலையிட வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

சினிமாவில் ஜொலித்துவிட்டு பின்னர் நலிந்து போனவர்களை தேடிப்பிடித்து அவர்களுக்காக ஒரு படம் நடித்து அவர்களை வளப்படுத்திய ரஜினி அவர்கள், அவர் படத்தை வெளியிட்டு நஷ்டமடைந்த எங்களுக்கு உதவாமல் இருப்பாரா என்ன?
 
திருப்பூர் சுப்பிரமணி போன்றவர்கள் தடுத்ததால் தான் எங்களுக்கு வரவேண்டிய தொகை தாமதமாக வந்தது என்பதை தமிழ்த் திரையுலகமே அறியும்.
விநியோகஸ்தர்களின் வலி தெரிந்தவர் தாணு என்பதால், இந்த விஷயத்தில் தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எங்கள் உணர்வை கொச்சைப்படுத்த வேண்டாம் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். சீப்பை ஒளித்துவிட்டால் திருமணம் நின்றுவிடும் என்ற பழைய பஞ்சாங்கத்தை தூசு தட்ட வேண்டாம். உங்களால் ஆர்.கே.வி ஸ்டூடியோவை வேண்டுமானால் பணியவைக்க முடியும். நூற்றுக்கணக்கான திரையரங்க உரிமையாளர்களையும் துடிப்போடு செயல்படும் விநியோகஸ்தர்களையும் உங்களால் பணியவைக்க முடியாது.
 
எங்களை புண்படுத்தும் வகையில் தங்களிடமிருந்து தொடர்ந்து அறிக்கைகள் வருமாயின் அதனை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் வகையில் பதில் அறிக்கைகள் தரப்படும். தலைவர் பதவி யாருக்கும் நிரந்தரமல்ல என்று அந்த அறிக்கையில் தாணுவை எச்சரித்துள்ளார்.
 
அடுத்த டார்கெட் திருப்பூர் சுப்பிரமணி. கேள்விகள் வடிவில் பத்து எறிகுண்டுகளை அவர் மீது வீசியிருக்கிறார்.
 
* லிங்கா படத் தயாரிப்பாளர் தன்னிடம் 6 கோடி மட்டுமே தந்ததாக இன்று கூறும் திருப்பூர் சுப்ரமணி மார்ச் 29ம் தேதி மதுரை அன்புவிடம் பணத்தைக் கொடுத்திருப்பதாகவும், இரண்டு தினங்களில் ஏரியா வாரியாக பிரித்து தருவோம் என்று உறுதி கூறியது ஏன்?
 
* 6 கோடியை எந்த தேதியில் ராக்லைன் வெங்கடேஷ் தங்களுக்கு கொடுத்தார்? தாங்கள் எந்த தேதியில் விநியோகஸ்தர்களுக்கு பிரித்து கொடுத்தீர்கள்?
 
* எனக்கு கொடுத்த 35 லட்சத்தை என்ன செய்தீர்கள் என்று என்னை கேட்கும் தாங்கள் திருச்சி திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திற்கு தொடர்பு கொண்டு நான் எவ்வளவு பணம் கொடுத்துவிட்டு புறம்போக்கு படத்தை வெளியிட்டேன் என்று கேட்டு தெரிந்து கொள்ளலாமே?
 
* எனக்கு கொடுத்த 35 லட்சத்தில் 13 லட்சத்தை திருச்சி திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திற்கும், 5 லட்சம் அன்னபூர்ணா திரையரங்கத்திற்கும், 2 லட்சத்தை அருண் திரையரங்கத்திற்கும், 7 லட்சத்தை முதல் நாள் டிக்கெட் வாங்கி நஷ்டமடைந்த ரஜினி ரசிகர் மன்றத்திற்கும், 3 லட்சத்தை வேதாரண்யம் பிரியா திரையரங்கை வாடகைக்கு எடுத்து ஓட்ட முயற்சித்து பின்னர் பின் வாங்கி கொண்டவர்களுக்கும் நான் கொடுத்துவிட்டது திருச்சியில் உள்ள அனைவருக்கும் தெரியும். இந்த விஷயம் தங்களுக்கு தெரிந்திருந்தும், தெரியாதது போல் கேள்வி கேட்பது விஷமத்தனம் இல்லையா?
 
* வேந்தர் மூவிஸிற்கு படம் பண்ணி தருவதாக சொல்லவே இல்லை என்கிறீர்களே.. முழு பூசணிக்காயை ஒரு பருக்கை சோற்றில் மறைக்க முயலலாமா?
 
* நீங்கள் படம் பண்ணி தருவதாக சொன்னவுடன், அனைத்து விநியோகஸ்தர்களையும் உடன் வைத்துக் கொண்டு, மதனின் அலைபேசியில் பேசி உடனடியாக நான் சம்மதம் பெற்றபோது வேல்முருகன் தப்பித்தான் என்று நீங்கள் சந்தோஷமாக கூறியதை மறந்து விட்டீர்களா?
 
* டெபாசிட் அடிப்படையில் திரையிட்டவர்கள், எம்ஜி அடிப்படையில் திரையிட்டவர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் என்று மூன்று தரப்பினர் சம அளவில் நஷ்டமடைந்திருக்கும் நிலையில், யாராவது ஒருவன் கிடைத்த பணத்தில் ஒரு தரப்பை மட்டும் திருப்திபடுத்தும் வகையில் பணத்தை கொடுக்க சம்மதிப்பானா?
 
* நீங்கள் கால்ஷீட் பற்றி பேசவில்லை என்கிற பட்சத்தில் கிடைத்த 12.5 கோடியை மூன்று தரப்பினருக்கும் சம அளவில் அல்லவா பிரித்து தந்திருக்க வேண்டும். உங்கள் வார்த்தையை நம்பி முதல்கட்ட தொகையை டெபாசிட் தரப்பினருக்கு தர சம்மதித்த எங்களுக்கு நீங்கள் கொடுக்கும் பரிசா இது?
 
* நீங்கள் மாற்றி மாற்றி உண்மையை மறைத்து பேசுபவர் என்பதை மீடியாவிடம் நிரூபித்து விட்ட நிலையிலும் மறுபடியும் பொய் முயற்சிக்கிறீர்களே.. இது நியாயமா?
 
* ராக்லைன் வெங்கடேஷ் 6 கோடி மட்டுமே உங்களிடம் கொடுத்ததாகவும், மீதிப் பணத்தை விரைவில் கொடுப்பார் என்றும் நீங்கள் கூறிவரும் நிலையில், விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் ஒற்றுமையோடு இணைந்து வந்தால் உடனடியாக பணத்தை தருவதாக தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு அறிவித்துள்ளாரே. அப்படி என்றால் அவர் எங்கிருந்து பணத்தை எடுத்து அவர்களிடம் கொடுப்பார்?
 
இத்தோடு போர் முடியவில்லை. அடுத்த அஸ்திரம் உடனே வரும். காத்திருங்கள்.