வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 23 மார்ச் 2015 (10:37 IST)

லிங்கா நஷ்டஈடு - சாயம் வெளுத்த விநியோகஸ்தர்களின் நன்றி அறிக்கை

பணம் கிடைக்கும்வரை கன்னடர் என்றும் சட்டத்தை உடைச்சிட்டாங்க, அதன் சந்துல ஒளிச்சிட்டாங்க என்று லிங்கா தயாரிப்பாளரையும், ரஜினியையும் வசைபாடிய விநியோகஸ்தர்கள், பத்து கோடி கிடைத்ததும் அப்படியே பச்சோந்தியாக நிறம் மாறி துதி பாட ஆரம்பித்துள்ளனர். அவர்களின் சாயம் வெளுத்த அறிக்கைதான் இந்த வருடத்தின் டாப் ப்ளாக் க்யூமர்.
அந்த அறிக்கை -
 
லிங்கா பட நஷ்டஈடு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தவர்களில் சரத்குமாரும், கலைப்புலி தாணுவும் முக்கியமானவர்கள். கலைக்குடும்பத்தில் கலகம் கூடாது என்று உழைத்தனர்.
 
10 கோடி ரூபாய் பணத்தை வாங்கி விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பிரித்து கொடுக்க கலைப்புலி தாணு பட்டபாட்டை பார்த்த போது அவரது பதவி முள் கிரீடம் என தெரிந்து கொண்டோம்.
 
ராக்லைன் வெங்கடேஷ் எங்களை உபசரித்ததை பார்த்த போது அவரை போய் கன்னடர் என பேசி விட்டோமே என்று மனம் கூனி குறுகிறது.
 
பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு நிவாரணமாக எதையாவது செய்து சந்தோஷப்படுத்துங்கள் என்று கூறினார். வேந்தர் மூவிஸ் இதில் பங்கு கேட்பது ஒன்றும் ஏற்புடையதாக இல்லை. திங்கட்கிழமை திரையரங்கு உரிமையாளர்களுடன் நடக்கும் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
 
முதல் கட்டமாக வைப்பு தொகை திருப்பி தரப்படும் என தெரிகிறது. மினிமம் கியாரண்டி அடிப்படையில் திரையிட்டவர்களுக்கு எங்களால் இயன்ற நிவாரணத்தை வழங்குவோம் என்ற உத்தரவாதத்தை வைக்கிறோம். எல்லா விநியோகஸ்தர்களும் தொடர்ச்சியாக படங்களை வெளியிட இருப்பதால் திரையரங்க உரிமையாளர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.
 
தோல்வி விரக்தியில் இருந்த எங்களுக்கு உதவிய ரஜினி, ராக்லைன் வெங்கடஷ், சரத்குமார், கலைப்புலி தாணு உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.