1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (10:44 IST)

லிங்கா பட நஷ்டம் - பாயும் புலிக்கு தடா போட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்

லிங்கா பட நஷ்டஈட்டை வேந்தர் மூவிஸ் தராவிடில் அந்நிறுவனம் தயாரித்துள்ள பாயும் புலி படத்தை வெளியிட மாட்டோம் என பன்னீர் செல்வம் தலைமையிலான திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.


 

 
லிங்கா நஷ்டஈடு விவகாரம் இன்னும் நீருபூத்த நெருப்பாகதான் உள்ளது. 12 கோடி ரூபாய் லிங்கா நஷ்டஈடாக தருவதாகக் கூறி அதில் பாதியை ராக்லைன் வெங்கடேஷ் தந்தார். அது உரியவர்களுக்கு பிரித்தளிக்கப்பட்டது. மீதி பணமும் தந்துவிட்டனர், பிரச்சனை முடிந்தது என தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தாணு அறிவித்தார். அத்துடன் ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கும் படத்தை தயாரிக்கும் வேலையில் கவனம் செலுத்தினார்.
 
அப்போதெல்லாம் மௌனமாக இருந்த திரையரங்கு உரிமையாளர்கள், நஷ்டஈட்டை தந்தால்தான் வேந்தர் மூவிஸின் பாயும் புலியை வெளியிடுவோம். இல்லாவிடில் தடைதான் என கட்டையை போட்டிருக்கிறார்கள். இன்று நடந்த திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
 
விஷால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கியிருக்கும் பாயும் புலியை செப்டம்பர் 4 வெளியிட முடிவு செய்திருந்தனர். திரையரங்கு உரிமையாளர்களின் முடிவால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.