1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Annakannan
Last Updated : திங்கள், 21 ஜூலை 2014 (16:42 IST)

ஆவணப் பட இயக்குநர் ஆனந்த் பட்வர்தனுக்கு லெனின் விருது

தமிழ் ஸ்டுடியோ திரைப்பட அமைப்பின் சார்பில் வழங்கப்படும் 2014ஆம் ஆண்டுக்கான லெனின் விருதுக்கு, ஆவணப் பட இயக்குநர் ஆனந்த் பட்வர்தன் தேர்வு பெற்றுள்ளார்.
 
மாற்று திரைப்படக் கலைஞர்களையும், சுயாதீன திரைப்படக் கலைஞர்களையும் கொண்டாடும் விதமாகத் தமிழ் ஸ்டுடியோ மூலம் வழங்கப்படும் படத் தொகுப்பாளர் பீ. லெனின் பெயரிலான விருது இந்த ஆண்டு, உலகின் தலைசிறந்த ஆவணப் பட இயக்குநரான ஆனந்த் பட்வர்தனுக்கு வழங்கப்பட இருக்கிறது. இதற்கான விழா, 2014 ஆகஸ்ட் மாதம், 15ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. 
 
ஆனந்த் பட்வர்தன்:
 
1950ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த ஆனந்த் பட்வர்தன், ஆங்கிலப் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 
 
அரசுக்கு எதிரான கலகக் குரலாகவே தொடர்ந்து தன்னுடைய ஆவணப் படங்களை எடுத்து வருபவர். இவரின் பெரும்பாலான ஆவணப் படங்களுக்கு மத்திய தணிக்கை குழு, சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டது. ஆனால் நீதிமன்றத்தில் போராடி தன்னுடைய ஆவணப் படங்களில் ஒரு கட் கூட இல்லாமல், இதுவரை தொடந்து உலகம் முழுவதும் திரையிட்டு வருகிறார். 1995இல் இவர் இயக்கிய Father Son and the Holy War என்கிற ஆவணப் படம், உலகின் முக்கியமான 50 ஆவணப் படங்களில் ஒன்றாக ஐரோப்பாவின் DOX இதழால் தெரிவு செய்யப்பட்டது. மார்க்சியம், காந்தியம், அம்பேத்கரியம் என முக்கியமான சிந்தனைப் பார்வைகளை கொண்டவர். தன்னுடைய எல்லாப் படங்களையும், இந்தச் சிந்தனைப் பார்வையின் அடிப்படையில் எடுத்து வருபவர். நான்கு முறை தேசிய விருதையும் பெற்றிருக்கிறார்.
 
தான் ஒரு படைப்பாளி, தன்னுடைய வேலை, படங்களை எடுப்பது மட்டுமே என்று நினைக்காமல், எடுக்கப்பட்ட தன்னுடைய படங்களுக்கு எதிராக அரசு அமைப்புகள் செய்யும் அத்தனை வேலைகளையும் முறியடித்து, தன்னுடைய படைப்பு நேர்மையானது, அதில் அரசின் தணிக்கை அமைப்பு எவ்விதத்திலும் தணிக்கை செய்ய முடியாது என்று தொடர்ந்து போராடி வருபவர். போரும் அமைதியும் என்கிற இவரது ஆவணப் படம், ஓராண்டு காலம் தடை செய்யப்பட்டிருந்த சூழலிலும் நீதிமன்றத்தில் போராடி, மீண்டும் அந்தப் படத்தை இந்தியா முழுவதும் திரையிடும் அனுமதியைப் பெற்றார். சில ஆண்டுகளுக்கு முன் இவர் இயக்கத்தில் வெளிவந்த ஜெய் பீம் காம்ரேட் ஆவணப் படம், தலித் அரசியலில் மிக முக்கியமான ஆவணமாகவே இருந்து வருகிறது. ஆவணப் படம் என்றாலும், அதன் வடிவம் குறித்தும், ஆனந்த பட்வர்தன் மிகுந்த தெளிவுடையவர். உலக அளவில், ஆவணப்பட இயக்குநர்களில், சம காலத்தில் ஆனந்த் பட்வர்தனே முதன்மையானவர்.
 
தன்னுடைய ஆவணப் படங்களின் மூலம் தொடர்ச்சியாக மக்களுக்காகப் போராடும் ஆனந்த் பட்வர்தனுக்கு இந்த ஆண்டு லெனின் விருதை வழங்குவதில் தமிழ் ஸ்டுடியோ பெருமை கொள்வதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.