1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 18 டிசம்பர் 2014 (10:57 IST)

நாளை வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை

லிங்காவின் அமர்க்களம் அடங்கத் தொடங்கியிருப்பதால் நாளை நான்குப் படங்கள் வெளியாகின்றன.
 
முதலில் மிஷ்கினின் பிசாசு. கலை, கலைஞன் என்றெல்லாம் மூச்சுமுட்ட பேசும் மிஷ்கின் பிசாசு படத்தின் விளம்பரங்களில் தனது பெயரையும் பாலாவின் பெயரையும் மட்டுமே குறிப்பிட்டு மற்ற கலைஞர்களை இருட்டடிப்பு செய்துள்ளார். படத்தை வெளியிடும் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் மறைந்த ராம.நாராயணன் மற்றும் அவரது மனைவி பெயர்கூட விளம்பரங்களில் உள்ளது. ஆனால் ஒளிப்பதிவு செய்தவர், இசையமைத்தவர், எடிட்டிங் செய்தவர் என்று யாருடைய பெயரும் இல்லை. மிஷ்கினின் இந்த அகம்பாவ இருட்டடிப்புக்கு முதலில் நம் கண்டனங்கள். 
பிசாசு படம் குறித்து பேசிய மிஷ்கின், பிசாசு, டாம்பீகமற்ற எளிமையான படம். ஒரு பெண் இறந்து பிசாசாகி விடுகிறாள். கதை எழுதும்போது, நான் பேரலலாக தமிழ்ப் படம், ஆங்கிலப் படம், உலகப் படம், ஹாரர் ஸ்டோரீஸ், கோஸ்ட் கதை எழுத தனியாக ஸ்க்ரீன்-ப்ளே புக்ஸ் படிச்சேன். அதிலிருந்து விலகி, நான் ஸ்க்ரிப்ட் எழிதியிருக்கேன். படம் தமிழ் சார்ந்து, உறவு சார்ந்து இருக்கும்” என்றார்.
 
பிரயாகா ஹீரோயின். படத்தில் பிசாசாக வருகிறவர் இவரே. நாயகன் பெயர் நாகா. தமிழச்சி தங்கபாண்டியன் இந்தப் படத்துக்கு பாடல் எழுதியுள்ளார். ஒளிப்பதிவு ரவி ராய். இசை அரோல் கொரெலி. 
 
யுஏ சான்றிதழ் பெற்றுள்ள பிசாசு நாளை திரைக்கு வருகிறது.
 
நாளை வெளியாகும் இன்னொரு படம், ரிச்சர்ட் நடித்துள்ள சுற்றுலா. என்ன மாதிரி கதை? இயக்குனர் ராஜேஷ் ஆல்பர்டிடம் கேட்டோம்.
 
ஒரே நாளில் நடக்கும் கதை. மலைப் பிரதேசத்தில் ஆடம்பர மாளிகையில் சொகுசாக வாழும் இளைஞன் ஒருவனின் இரு வேறு முகங்களை பரபரவென்று ஓடும் திரைக்கதை மூலம் படமாக்கி இருக்கிறோம். 
 
ஜானி என்ற கதாப்பாத்திரத்தில் ரிச்சர்ட் நெகடிவ் வேடம் ஏற்றிருக்கிறார்..அவரது கலையுலக அங்கீகாரத்திற்கு அஸ்திவாரம் போடும் படமாக சுற்றுலா இருக்கும்.
 
முழுக்க முழுக்க ஊட்டியிலேயே படமாக்கி இருக்கிறோம். படத்தில் இடம்பெறும் பிரமாண்டமான மாளிகை தினமும் ஒரு லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து படமாக்கினோம்.
 
அடுத்து என்ன... அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக ஆங்கிலப் படத்திற்கு நிகரான திரைக்கதை இதில் இருக்கும் என்றார்.
 
இவை தவிர நாடோடிப் பறவை, நட்பின் நூறாவது நாள் ஆகிய படங்களும் திரைக்கு வருகின்றன.
 
அமீர் கானின் பிகே படமும் நாளை திரைக்கு வருகிறது. ராஜ்குமார் ஹிரானியின் இயக்கம் என்பதால் படத்துக்கு இந்தியாவுக்கு வெளியேயும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
 
நாளை வெளியாகும் படங்கள், வரவிருக்கும் மூன்று தினங்களில் லிங்கா வசூலிப்பதில் சின்ன சதவீதத்தை பெற முடிந்தாலே அது பெரிய விஷயம்தான்.