வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2019 (12:57 IST)

யார் அந்த அதீரா? – கே.ஜி.எஃப் அத்தியாயம் 2 புதிய அப்டேட்

எப்போது வரும் என்று இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களால் பெரிது எதிர்பார்க்கப்படும் படமான “கே.ஜி.எஃப்: சாப்டர் 2”ன் புதிய அப்டேட் ஒன்றை அதன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

யஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், “கே.ஜி.எஃப்: சாப்டர் 1”. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். அதுவரை யஷ் யார் என்று தெரியாமல் இருந்த மாநிலங்களில் கூட அவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவானார்கள்.

70 கோடி ரூபாய் செலவில் உருவான “கே.ஜி.எஃப்: சாப்டர் 1” உலகமெங்கும் 250 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் அடுத்த பாகமான “கே.ஜி.எஃப்: சாப்டர் 2” எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இன்று 11 மணிக்கு முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிடப் போவதாக தயாரிப்பு நிறுவனம் ஹம்போலே ப்லிம்ஸ் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அவர்கள் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அதீரா யார் என்பது பற்றி ஜூலை 29ம் தேதி அறிவிக்கப்போவதாக கூறியுள்ளனர். முதல் பாகத்தில் இந்த அதீரா கதாப்பாத்திரம் வந்திருந்தாலும் அவர் முகத்தை காட்டவில்லை. முதல் பாக வில்லன் கருடனுக்கு பிறகு தங்க சுரங்கத்தை தனது ஆதிக்கத்தில் கொண்டு வருவதற்காக அரபு நாட்டில் காத்திருப்பதாக அந்த கதாப்பாத்திரத்தை காட்டியிருப்பார்கள்.

இந்த இரண்டாம் பாகத்தில் இந்த அதீரா கதாப்பாத்திரம்தான் முக்கிய வில்லனாக இருப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அதீராவாக யார் நடித்திருபார் என்ற கேள்விக்கு சஞ்சய் தத் என்று பதில் சொல்கிறார்கள் நெட்டிசன்கள். சஞ்சய் தத் மற்றும் ரவீன் டண்டோன் ஆகியோர் இரண்டாம் பாகத்தில் நடித்திருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் காதாப்பாத்திரம் குறித்து எந்த அதிகாரப்பூர்வமான விவரங்களையும் படக்குழு தெரிவிக்கவில்லை.

தற்போது KGF Chapter2 மற்றும் Adheera ஆகிய இரு ஹேஷ்டேகுகளும் ட்விட்டரில் ட்ரெண்டாகி உள்ளன. யார் அந்த அதீரா? என்று ரசிகர்கள் காரசாரமாக விவாதித்து வருகின்றனர். அதீரா யார் என்பதை தெரிந்து கொள்ள ஜூலை 29ம் தேதி 10 மணி வரை காத்திருக்க வேண்டியதுதான்.