1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (22:17 IST)

கேணி: திரைவிமர்சனம்

தமிழக, கேரள எல்லையில் உள்ள ஒரு கிணறு குறித்த கதைதான் இந்த கேணி திரைப்படம். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் குறித்த விமர்சனத்தை பார்ப்போம்

ஜெயப்ரதாவின் கணவர் கேரளாவில் உயர் பதவியில் உள்ளார். அவருக்கு தமிழக எல்லையில் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டில் உள்ள கிணற்றில் வற்றாத அளவுக்கு எப்போதுமே தண்ணீர் இருக்கும். அந்த கிணற்றை அபகரிக்க சூழ்ச்சி செய்யும் இருமாநில சில அரசியல்வாதிகள், அவர் மீது ஒரு பழியை சுமத்தி சிறையில் அடைக்கின்றனர். சிறையில் மாரடைப்பால் அவர் இறந்துவிட, அவருடைய கடைசி ஆசையான அந்த கிணற்றை அந்த பகுதி மக்களுக்கு பயன்படும் வகையில் மாற்ற ஜெயப்ரதா நடத்தும் போராட்டம் தான் இந்த படத்தின் மீதிக்கதை

ஜெயப்ரதா தான் படத்தின் முக்கிய கேரக்டர். 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் பார்த்த ஜெயப்ரதாவா இவர்? முகத்தில் வயது தெரிகிறது. இருப்பினும் அவரது நடிப்பில் இன்னும் இளமை. கிணற்றை அடைய அவர் நடத்தும் போராட்டங்கள், அதனால் அவர் அடையும் துன்பங்கள் ஆகிய காட்சிகளில் நடிப்பு ஓகே

நாசர், பார்த்திபன், ரேவதி, ரேகா, எம்.எஸ்.பாஸ்கர், அனுஹாசன், தலைவாசல் விஜய், ஆகியோர் தங்கள் கேரக்டர்களை சரியாக புரிந்து நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையில் எஸ்பிபி, ஜேசுதாஸ் பாடும் அய்யாச்சாமி பாடல் அருமை.

படத்தில் தேவையில்லாத காட்சிகள் மிக அதிகம். இயக்குனர் நிஷாத் மற்றும் படத்தொகுப்பாளர் இணைந்து இந்த படத்தை ஒன்றரை மணி நேர படமாக மாற்றினால் ஒரு வெற்றிப்படம் உறுதி. மேலும் படத்தில் தத்துவங்கள் மிக மிக அதிகம். அதுவும் கதைக்கு சம்பந்தமில்லாமல் நடித்திருக்கும் அனைத்து கேரக்டர்களும் தத்துவம் பேசுவது செயற்கையாக உள்ளது. மேலும் ஜெயப்ரதாவின் கேரக்டரை இயக்குனர் இன்னும் அதிகமாக யோசித்திருக்கலாம். மற்ற கேரக்டர்கள் ஜெயப்ரதாவுக்கு கொடுக்கும் பில்டப், திரைக்கதையில் இல்லை. ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை ஓகே.

ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள், குத்துப்பாட்டு இல்லாமல் இருப்பதால் குடும்பத்துடன் ஒருமுறை பார்க்கலாம்.

2.25/5