வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 28 மார்ச் 2015 (10:10 IST)

கொம்பனுக்கு எதிராக மீண்டும் தணிக்கைக்குழுவிடம் புகார்

கொம்பன் படம் தேவர் சாதியினரை உயர்த்திக் காட்டும் படம், அதில் சர்ச்சைக்குரிய வசனங்கள், காட்சிகள் உள்ளன. அவற்றை அப்படியே வெளியிடக் கூடாது என்று டாக்டர் கிருஷ்ணசாமி ஏற்கனவே புகார் கூறியிருந்தார். இந்நிலையில் மீண்டும் கொம்பன் மீது புகார் தரப்பட்டுள்ளது.
 

 
தூத்துக்குடி மாவட்டம் அடைக்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த ஜே.அந்தோணி லிவிங்ஸ்டன், வக்கீல் ஜி.விஜயகுமார் மூலம் திரைப்பட தணிக்கைக் குழு தலைவருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது்– 
 
நடிகர் கார்த்தி, லட்சுமிமேனன் ஆகியோர் நடித்துள்ள ‘கொம்பன்’ திரைப்படம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களை புகழ்ந்தும், உயர்வாகவும் சித்தரித்து தயாரிக்கப்பட்டுள்ளது. 
 
தென்மாவட்டங்களில் ஒரு சிறு வார்த்தைக்காக மிகப்பெரிய சாதி கலவரம் ஏற்பட்டு விடும். கடந்த ஓராண்டில் மட்டும் தென் மாவட்டத்தில் நடந்த சாதி மோதலில் 105 கொலைகள் நடந்துள்ளது. 
 
கொம்பன் படத்தில் வில்லன் கதாபாத்திரம் ‘நாடார்’ சமுதாயத்தை சேர்ந்தவர் போலவும், கதாநாயகன் வேறு ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர் போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதுவும் ‘ராமநாதபுரம் மாவட்டத்தில் நம்மை எதிர்த்து போராட யார் இருக்கிறார்?’ என்ற வசனத்தை கதாநாயகன் கார்த்தி பேசுகிறார். 
 
இது தேவையில்லாத சாதி மோதலை தென் மாவட்டங்களில் ஏற்படுத்தும். திராவிட இனத்தில், மிகப்பெரிய சமுதாயம் நாடார் சமுதாயமாகும். ராஜ பரம்பரையை சேர்ந்த இந்த சமுதாய மக்கள், கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள். 
 
சிறந்த நிர்வாகிகளாகவும், தொழிலதிபர்களாகவும், கல்வியாளராகவும் திகழ்ந்து வரும் நாடார் சமுதாய மக்களை தரம் தாழ்த்தி, கொம்பன் படத்தில் கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்போது எடுக்கப்பட்டுள்ள காட்சிகள், வசனங்களுடன் இந்த திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்பட்டால், அது சாதி மற்றும் மதக்கலவரத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும். 
 
மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகம் பெற்ற சினிமா துறையை சேர்ந்தவர்கள், சமுதாய அக்கறை எதுவும் இல்லாமல், இதுபோன்ற திரைப்படங்களை எடுக்கின்றனர். எனவே, ‘கொம்பன்’ படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்கள், காட்சிகளை மாற்றி அமைக்கவும், மீண்டும் ஆய்வு செய்து தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். இந்த மாற்றங்களை செய்யாமல் கொம்பன் படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.