வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 29 மே 2015 (10:51 IST)

தயாரிப்பாளர் மீது கார்த்திக் சுப்பாராஜ் வழக்கு - ஜிகிர்தண்டா ரீமேக் உரிமையை விற்க நீதிமன்றம் தடை

ஜிகிர்தண்டா படத்துக்கு தணிக்கைக்குழு யுஏ சான்றிதழ் தந்த போதே அதன் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜுக்கும், தயாரிப்பாளர் கதிரேசனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. யு சான்றிதழ் கிடைக்க சில காட்சிகளை நீக்கும்படி தணிக்கைக்குழு கூறியது. தயாரிப்பாளரும் கார்த்திக் சுப்பாராஜை நிர்ப்பந்தித்தார். ஆனால், அவர் அதற்கு பணியவில்லை. படம் யுஏ சான்றிதழுடனே வெளியானது.
 
இந்தப் பிரச்சனையை மனதில் வைத்து பட வெளியீட்டை கதிரேசன் வேண்டுமென்றே தள்ளி வைத்தார். கார்த்திக் சுப்பாராஜ் உள்பட யாருக்கும் பட வெளியீடு எந்த நாள் என்பதை தெரிவிக்கவில்லை. படத்தின் ஐம்பதாவது நாளுக்கு சின்ன விளம்பரம்கூட அவர் தரவில்லை.
 
இந்நிலையில் படத்தின் இந்தி ரீமேக்கை சஜித் நடியட்வாலாவுக்கு கதிரேசன் விற்க முன்வந்தார். கார்த்திக் சுப்பாராஜுக்கு தெரியாமலே இந்த முயற்சியும் நடந்தது. இதனை அறிந்த கார்த்திக் சுப்பாராஜ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ரீமேக் உரிமையை விற்க தடை வாங்கியுள்ளார். அது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு.
 
எஸ்.கதிரேசனுடன் நான் செய்துகொண்ட ஒப்பந்தப்படி இந்தி, மொழிமாற்று உரிமத்தில் 40 சதவீதம் எனக்கு தர வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் சமீபத்தில், எஸ்.கதிரேசன் எனக்கு தெரியாமல் இந்த திரைப்படத்தின் உரிமையை விற்க முயல்வதாக அறிந்தேன். தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தில் இந்த பிரச்னையை பதிவு செய்தேன். பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக பிரச்சனையை நாலு சுவற்றுக்குள் முடிக்கலாம் என கூற, பலமுறை பேச்சுவார்த்தை நடந்தது. ஆயினும் எஸ்.கதிரேசன் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழையாமல் போகவே சுமூகமான பேச்சுவார்த்தை நடக்கவில்லை.
 
எனவே இயக்குனர் சங்கத்தின் ஆலோசனையோடு வேறு வழியில்லாமல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தேன். சென்னை உயர் நீதிமன்றம் இப்போது படத்தின் மொழிமாற்று உரிமத்தை விற்பதற்கு ஜூன் 11-ம் தேதி வரை தடை விதித்துள்ளது. தயாரிப்பாளருக்கும் இத்தடை உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தரப்பு பதிலையும் நீதிபதி கோரியுள்ளார்.
 
- இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.