1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 16 ஜூலை 2019 (12:41 IST)

தலைவன் இருக்கிறான்: கமல்ஹாசனின் அரசியல் படம்?

நடிகர் கமல்ஹாசனின் வாழ்நாள் கனவான “தலைவன் இருக்கிறான்” திரைப்படத்தை மீண்டும் தொடங்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் கமல்ஹாசன். சில சமயம் தமிழ் சினிமா மரபுகளை மீறி சில முயற்சிகளை செய்வார். அது சர்ச்சைக்கு உள்ளாகி விடும். அப்படியாக இவர் இயக்கி நடித்த தேவர் மகன், விருமாண்டி, விஸ்வரூபம் போன்ற படங்கள் பல பிரச்சினைகளை சந்தித்தன. இவரது மற்றொரு கனவு படமான “மருதநாயகம்” படப்பிடிப்பு ஆரம்பித்து பாதியில் சில பிரச்சினைகளால் நின்று போனது.

அதேப்போல இவர் 2008ல் “தலைவன் இருக்கிறான்” என்ற தலைப்பில் ஒரு அரசியல் படத்தை இயக்கி நடிக்க விரும்பினார். அப்போதும் அந்த படப்பிடிப்புக்கு பல வகைகளில் தடைகள் எழுந்தது. இறுதியாக அந்த முயற்சியை கைவிட்டு “உன்னை போல் ஒருவன்” திரைப்படத்தை எடுத்தார். இது இந்தியில் நஸ்ருதீன் ஷா நடித்து வெளியான “வெட்னஸ்டே” படத்தின் ரீமேக்.

தற்போது அரசியல் செயல்பாடுகளில் ஆர்வமாக இறங்கியுள்ள கமல் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் சங்கர் இயக்கத்தில் இவர் நடிப்பதாக இருந்த “இந்தியன் 2”ம் சில பல காரணங்களால் படபிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 10 வருடம் கழித்து மீண்டும் “தலைவன் இருக்கிறான்” படத்தை எடுக்கவிருக்கிறார் கமல்.

சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானோடு கமல் அமர்ந்திருக்கும் அதிகாரப்பூர்வமான புகைப்படம் இணையத்தில் வெளியானது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே கமலின் தெனாலி, இந்தியன் போன்ற படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இது முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இன்னும் அதிகாரபூர்வமாக இந்த படம்தான் என யாரும் உறுதியாக கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.