வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 28 மார்ச் 2015 (13:08 IST)

விஸ்வரூபம் வழக்கு - சமரசத்துக்கு முன்வந்த கமல்

விஸ்வரூபம் திரைப்படம் வெளியீடு தொடர்பான வழக்கில் சமரசம் செய்து கொள்வதாக தமிழ்நாடு திரைப்பட வெளியீட்டாளர்கள் சங்கமும், ராஜ் கமல் நிறுவனமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன.
 
கடந்த 2013-ஆம் ஆண்டு, தனது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான விஸ்வரூபம் படத்தை டி.டி.ஹெச்-சில் வெளியிட நடிகர் கமலஹாசன் முடிவெடுத்தார். அந்த முடிவினால் தங்களது தொழில் பாதிக்கப்படுவதாகக் கூறி, தமிழ்நாடு திரைப்பட வெளியீட்டாளர் சங்கத்தினர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இதுதொடர்பாக சட்டரீதியான வர்த்தகப் போட்டி முறைகேடுகளை விசாரிக்கும் ஒழுங்குமுறை ஆணையமான இந்திய போட்டி ஆணையத்தில் (காம்படீஷன் கமிஷன் ஆஃப் இந்தியா) கமல் புகார் அளித்தார்.
 
அந்தப் புகாரை விசாரணை செய்த இந்தியப் போட்டி ஆணையம், மனுதாரரின் புகாரில் அடிப்படை முகாந்திரம் இருந்தால் அதை விசாரணை செய்ய வேண்டும் என போட்டி ஆணையரின் தலைமை இயக்குநருக்கு 2013-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ஆம் தேதி உத்தரவிட்டது.
 
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு திரைப்பட வெளியீட்டாளர்கள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
 
இதற்கிடையில், புகாரை விசாரணை செய்த போட்டி ஆணைய தலைமை இயக்குநர் குழுஇ திரைப்பட வெளியீட்டாளர் சங்கம் தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்காமலும், தங்கள் கட்டுப்பாட்டில் திரைப்படங்கள் வெளியாக வேண்டும் என்றும் முடிவெடுத்துள்ளதாக, அந்த சங்கத்திற்கு எதிராக அறிக்கை சமர்ப்பித்தது.
 
இதைத் தொடர்ந்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து திரைப்பட வெளியீட்டாளர்கள் சங்கம் மேல் முறையீடு செய்தது. அதில், கமல் தரப்பும், சங்கத்தின் தரப்பிலும் சமரசம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது
 
இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் வெ.ராமசுப்பிரமணியன், பி.ஆர்.சிவக்குமார் ஆகியோர் முன்பு நடைபெற்றது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு்
 
மனுதாரர், எதிர்மனுதாரர் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள சமரசத்தை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் இந்தியப் போட்டிகள் ஆணையத்தின் அதிகாரத்துக்குட்பட்டதாகும்.
 
ஒருவேளை இந்த சமரசத்தை ஏற்றுக் கொண்டால், இருதரப்பினரும் சமரச உடன்படிக்கையை மனுவாக, இந்திய போட்டிகள் ஆணையத்தில் தாக்கல் செய்யவேண்டும்.
 
அந்த சமரச உடன்படிக்கை மனுவை பெயரளவில் ஏற்றுக் கொள்ளாமல், அந்த மனுவையும், தலைமை இயக்குநர் அளித்த அறிக்கையையும் பரிசீலனை செய்து இந்தியப் போட்டி ஆணையம் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.