வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 25 நவம்பர் 2017 (19:52 IST)

அய்யகோ தம்பி..உனக்கு இந்த நிலையா? - அன்பு செழியனுக்கு கலைப்புலி தாணு ஆதரவு

சினிமா ஃபைனான்சியர் அன்பு செழியன் மிகவும் நல்லவர். அவர் இல்லாமல் தமிழ் சினிமாவில் படம் தயாரிக்க முடியாது என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்துள்ளார்.


 
நடிகர் சசிகுமாரின் உறவினரும், அவரின் கம்பெனி புரடெக்‌ஷனை நிர்வகித்து வந்தவருமான அசோக்குமார் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். மேலும், தான் எழுதிய கடிதத்தில், தனது தற்கொலைக்கு சினிமா ஃபைனான்சியர் அன்பு செழியனே காரணம் என எழுதி வைத்திருந்தார். 
 
இந்த விவகாரம் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்பு செழியனுக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். மேலும், அவருக்கு எதிராக சினிமாத்துறையினர் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
அதே நிலையில் அவருக்கு ஆதரவாக இயக்குனர் சீனுராமசாமி, விஜய் ஆண்டனி, சுந்தர் சி ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர். அந்த வரிசையில் தற்போது கலைப்புலி தாணுவும் அன்பு செழியனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
 
அவர் கூறியதாவது:
 
அசோக்குமார் விவகாரத்தில் அன்புவின் மீது பழியும், பாவமும் விழுந்துள்ளது. இது அதிர்ச்சியாக இருக்கிறது. அவர் முதலீடு செய்யவில்லை எனில் நாங்கள் எல்லாம் இல்லை. அவர் இல்லையெனில் சிறு பட தயாரிப்பாளர்ர்கள் ஒட்டு மொத்தமாக அழிந்து போவார்கள். ரஜினிமுருகன் படத்திற்கு பிரச்சனை ஏற்பட்ட போது அவர்தான் ரூ.25 கோடி கொடுத்து ரிலீஸ் செய்ய உதவினார். என்னுடைய அத்தனை படங்களுக்கும் அந்த தம்பிதான் பைனான்ஸ். கபாலி படம் வெளியாகி 2 நாட்கள் கழித்துதான் அவருக்கு பணம் கொடுத்தேன். எந்த நேரத்தில் சென்றாலும் ‘ என்ன செய்ய வேண்டும் அண்ணா?’ என அன்பாக கேட்பார். அப்படிப்பட்ட தம்பிக்கு இப்படி ஒரு பழியா?


 
இந்த பிரச்சனையை பேசி தீர்த்திருக்கலாம். அவரால் இதுவரை எந்தப்படமும் நின்று போனதில்லை. என் நெற்றிப்பொட்டு மீது சத்தியம். ஒரு தூய்மையான மனிதரை பிரச்சனையில் சிக்க வைத்துவிட்டார்கள். இதற்கு பின் ஏதோ சதி இருக்கிறது.
 
அசோக்குமாரின் கடிதத்தை போலீசார் படித்தால் உண்மை தெரியும். மற்ற பைனான்சியர்கள் வெறும் 30, 40 சதவீத பணம் மட்டுமே கொடுப்பார்கள். அது ஹீரோவின் சம்பளத்திற்கே போய்விடும். ஆனால், அந்த புண்ணியவான் அன்புதான் மீதிப்பணம் கொடுக்கிறார். அவர் இல்லையேல் இங்கே படம் எடுக்க முடியாது. எந்த சூழலிலும் அவர் சினிமாவை விட்டு போய்விடக்கூடாது. அன்பு உண்மையிலேயே அன்பானவர்.. பண்பானவர். பாசமானவர்.  அதேநேரம், அசோக் குமாரின் குடும்பத்திற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்” என தெரிவித்துள்ளார்.