வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 4 ஜூலை 2015 (10:37 IST)

மோசடி நிறுவனங்களுக்கு முடிவுகட்ட நேரடியாக களத்தில் இறங்கிய இளையராஜா

இளையராஜா இசையமைத்த ஆயிரக்கணக்கான பாடல்களை வைத்து சில குறிப்பிட்ட நிறுவனங்கள் காசு பார்க்கின்றன. அவரது பாடல்களை மேடையில் பாடுகிறார்கள் அல்லவா? அதற்கும் ஐ.பி.ஆர்.எஸ். என்ற அமைப்பு பணம் வசூலிக்கிறது. ஆனால் அந்தப் பணத்தில் பத்து சதவீதம்கூட சம்பந்தப்பட்ட இசையமைப்பாளர்களை சென்று சேர்வதில்லை. இதனை எதிர்த்து இளையராஜா ரொம்ப நாளாக போராடியும், புகார் கொடுத்தும் வருகிறார்.
 
இந்த நியாயமான முயற்சியை சிலர், இளையராஜா காசுக்கு அலைகிறார் என உண்மை தெரியாமல் திரித்து விமர்சித்து வருகின்றனர்.
 
இளையராஜா, மேடை மெல்லிசை மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் தலைமை சங்கத்தின் ஆலோசனை கூட்டத்தை கூட்டி இருந்தார்.  இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து மெல்லிசை குழு நடத்துபவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் இளையராஜா பேசியதாவது.
 
"நான் உங்களிடம் பணம் கேட்டு வரவில்லை. நான் எப்போதும் கொடுப்பவன் கேட்பவன் அல்ல. எத்தனையோ ஆயிரம் பாடல்களை உங்களுக்காக வழங்கி இருக்கிறேன். நான் இப்போது உங்களை சந்திக்கும் காரணம் என்னவெனில் என்னுடைய பாடல்களையோ, மற்றவர்கள் பாடல்களையோ நீங்கள் பாடும் போது சட்டப்படி அதற்கு அனுமதி பெற வேண்டும். 
 
இதற்காகத் தான் ஐ.பி.ஆர்.எஸ். அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த அமைப்பின் நிர்வாகம் தவறான கணக்கு காட்டி என் போன்றவர்களை ஏமாற்றி வருகிறது. என் பாடல்களுக்காக அவர்கள் வசூலிப்பதில் பத்து சதவீதம் கூட எனக்கு வந்து சேரவில்லை. அவர்கள் கொடுப்பதை வாங்கிக்கொள்ள வேண்டுமாம். இது என்ன நியாயம். இதனால் அந்த அமைப்பில் இருந்தும் விலகிகொள்ள முடிவு செய்துள்ளேன். 
 
உங்களிடம் இதை நேரடியாக சொல்லி என் பாடல்களுக்கான தொகையை என் அலுவலகத்தில் நேரடியாக செலுத்த சொல்லலாம் என யோசித்து உங்களை அழைத்தேன். இவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்று உங்களை கட்டாயப்படுத்தவில்லை. எத்தனை பாடல்கள் பாடுகிறீர்கள். அதற்கு எவ்வளவு கொடுக்கலாம் என்று நீங்களும் சினி மியூசிக் யூனியனும் பேசி முடிவெடுக்கலாம். 
 
பாபநாசம் சிவன், டி.ஆர். மகாலிங்கம், ஜி.ராமநாதன், தட்சிணா மூர்த்தி, எம்.எஸ்.ஞானமணி, எஸ்.எம்.சுப்பையா நாயுடு, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இன்றைக்கு உள்ள இசையமைப்பாளர்கள் வரை எல்லோருக்கும் பலன் கிடைக்கட்டும். 
 
இவ்வாறு இளையராஜா பேசினார்.