வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 26 மே 2016 (11:24 IST)

"அப்துல் கலாமின் கனவு காணுங்கள் வாசகத்தில் எனக்கு உடன்பாடில்லை” – இளையராஜா

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கனவு காணுங்கள் வாசகத்தில் எனக்கு உடன்பாடில்லை என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.
 

 
ஈரோட்டில் இருக்கும் ‘தமிழ் இலக்கியப் பேரவை’ என்கிற அமைப்பு ஆண்டுதோறும் தமிழுக்கு தொண்டு செய்து வரும் தமிழறிஞர்களை தேர்ந்தெடுத்து அவரின் தமிழ்ச் சேவையை பாராட்டி தமிழறிஞர் எஸ்.கே.எம். பெயரில் இலக்கிய விருதினை வழங்கி வருகிறது. இந்த இலக்கிய விருது சான்றிதழையும், இருபத்தைந்தாயிரம் ரூபாய் பொற்கிழியையும் உள்ளடக்கியது.
 
இந்த ஆண்டிற்கான எஸ்.கே.எம். இலக்கிய விருதை கவிஞர் மு.மேத்தாவிற்கு கொடுத்து கவுரவித்திருக்கிறது ஈரோடு தமிழ் இலக்கியப் பேரவை.
 
ஐம்பதாண்டு பாரம்பரியமான ஈரோடு தமிழ் இலக்கிய பேரவையில் இதற்கு முன்பு ‘தமிழ்க் கடல்’ இராய.சொக்கலிங்கம், அ.ச.ஞானசம்பந்தம், பாரதிதாசன், கவியரசர் கண்ணதாசன், கவிஞர் முடியரசன், அவ்வை துரைசாமி பிள்ளை, கி.வா.ஜெகநாதன், கி.ஆ.பெ.விஸ்வநாதன், ம.பொ.சிவஞானம், குன்றக்குடி அடிகளார் போன்ற தமிழ்ச் சான்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார்கள்.
 
இந்தாண்டுக்கான விருது வழங்கும் விழா ஈரோடு திண்டல் மலைப் பகுதியில் அமைந்திருக்கும் வேளாளர் மகளிர் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்றது.
 
இசைஞானி இளையராஜா இந்த விழாவிற்கு தலைமையேற்று, கவிஞர் மு.மேத்தாவிற்கு எஸ்.கே.எம். இலக்கிய விருதினை வழங்கினார்.
 
இந்த விழாவில் இசைஞானி இளையராஜா பேசும்போது, “நான் அதிகம் படிக்காதவன். நான் எங்கு சென்றாலும் அங்குள்ள தவறுகளைத்தான் முதலில் பார்ப்பேன். எனவேதான் பல நிகழ்ச்சிகளுக்கு வருவதை நான் தவிர்க்கிறேன். நான் ஒதுங்கியிருப்பதையே விரும்புகிறேன். இருப்பினும் நான் செல்லும் இடங்களில் எல்லாவற்றையும் பார்த்தபடிதான் இருக்கிறேன்.
 
‘இந்த விழாவுக்கு நீங்கள் வர வேண்டும். உங்கள் கையால்தான் விருதைப் பெற்றுக் கொள்வேன். இல்லையென்றால் எனக்கு இந்த விருதே வேண்டாம்..’ என்று கவிஞர் மு.மேத்தா என்னிடம் மிகவும் கேட்டுக் கொண்டதால் அவருடைய விருப்பத்திற்காகவே இந்த விழாவுக்கு வந்தேன்.
 
ஒரு பாடலை கேட்கும்போது உங்கள் மனதில் ஒரு வேதியியல் மாற்றம் ஏற்படும். அது எவ்வாறு ஏற்படுகிறதென்று உங்களால் சொல்லவே முடியாது. அமைதியிலும், இசையிலும் இறைவன் இருக்கிறான். இறைவனின் சன்னதியில் நிற்கும்போது கிடைக்காத அமைதியைக் கொடுப்பது இசை.
 
நாம் பாட்டு கேட்கும்போது, பாடலுக்குள் நம் சிந்தனை நின்றுவிடும். சன்னிதானத்தில் நிற்கும்போதும், அங்கு ஏற்படும் அமைதியை நாம் வேறு எங்கும் பெற முடியாது. இதனால்தான், ‘இசையின் பயனே இறைவன்தான்’ என திருநாவுக்கரசர் கூறுகிறார். இறைவன் இசையாகவே இருக்கிறான்.
 
‘கற்றதலினால் ஆன பயன் இறைவனை தொழுவதே’ என திருக்குறள் சொல்கிறது. அப்படியானால் கல்லாதவன் கடவுளை தொழுவதால் பயனில்லையா..? அந்தக் குறளின் இறுதியில் ‘படித்தவனைவிட படிக்காதவனே மேல்’ எனக் கூறுகிறது. படித்தவன்தான், ‘கோவிலுக்குப் போக வேண்டாம்’ என்கிறான். எங்கிருந்தாலும் தொழு. அது உனக்கு பலன் தரும். அதைத்தான் கல்லாதவன் செய்து பலனைப் பெறுகிறான்.
 
‘அகர முதல’ என்பதில் ‘அ’ என்பது எழுத்து அல்ல. சத்தம் வடிவில் அரூபமாக இருக்கும் இறைவனைத்தான், அந்த ‘அ’ என்கிற எழுத்து குறிக்கிறது. சிந்தனை என்பது தெளிவோடு இருப்பதைக் குறிக்கவில்லை. சிந்தனை இல்லாதவனே தெளிவாக இருக்கிறான். குழப்பம் இருந்தால்தான் சிந்தனை ஏற்படும்.
 
மக்களால் ஈர்க்கப்பட்ட மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமை அபூர்வமாகத்தான் நான் பார்க்கிறேன். நடிகராக, அரசியல் தலைவராக இல்லாமல், குக்கிராமத்தில் உள்ளவர்கள்கூட, அவருக்கு அஞ்சலி செலுத்தியதைப் பார்த்தேன். இது எனக்கு நிறைய விஷயங்களை உணர்த்தியது. ஆனாலும், அவரது ‘கனவு காணுங்கள்’ என்ற வாசகத்தில் எனக்கு உடன்பாடில்லை.
 
தானாக வருவதுதான் கனவு. நாம் முயற்சித்து காண்பது கனவல்ல. நாம் காணும் கனவில் வரும் காட்சிகள் நிஜமல்ல. இருந்தாலும், கலாம் கூறிய நோக்கம் சிறந்தது என்பதுடன், உலக அளவில் நான்கு கோடி மாணவர்கள், இளைஞர்களை சந்தித்த பெருமைக்குரியவர் என்ற ரீதியில் எனக்கு அவர் மீது எப்போதும் மரியாதை உண்டு..” என்றார்.

நன்றி : Ilayarajadevotee