வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 2 ஏப்ரல் 2015 (09:15 IST)

கொம்பன் படத்துக்கு தடை விதிக்க முடியாது - நீதிமன்றம் உத்தரவு

கொம்பன் படத்துக்கு தடை விதிக்க முடியாது என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொம்பன் படத்தில் சாதி மோதல்களை ஏற்படுத்தும் காட்சிகள், வசனங்கள் உள்ளதால் அப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள், படத்தை ஓய்வு பெற்ற நீதிபதிகள் பார்த்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.
 
அதன்படி சென்னை போர் பிரேம் திரையரங்கில் ஓய்வு பெற்ற இரு நீதிபதிகள் மற்றும் கிருஷ்ணசாமியின் ஆள்கள் படத்தைப் பார்த்தனர். படத்தின் வசனத்தை குறிப்பெடுக்க வசதியாக மீண்டும் படத்தை திரையிட வேண்டும் என்று படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கிருஷ்ணசாமியின் ஆள்கள் தகராறு செய்ய ஆரம்பித்தனர். அதனால் நீதிபதிகள் முழுமையாக படத்தைப் பார்க்காமலே வெளியேறினர். 
 
அவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நேற்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். 
 
படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள், வசனங்கள் இருப்பதற்கு போதிய ஆதாரணங்களை மனுதாரர் தரப்பு தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில் தணிக்கைக்குழு சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தை யாரும் முழுமையாக பார்க்காத நிலையில், படத்துக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் படத்துக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.