1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 11 ஜனவரி 2019 (15:43 IST)

பேட்ட, விஸ்வாசம் திரையிட்ட தியேட்டர்கள் – 50 ஆயிரம் அபராதம்

பேட்ட விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும்  நேற்று வெளியான நிலையில் அனுமதியின்றி அந்தப் படங்களை சிறப்புக்காட்சிகளாக திரையிட்ட திரையரங்கங்களுக்கு 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ரஜினி, விஜய், அஜித் ஆகிய நடிகர்களின் படங்கள் எப்போது ரிலிஸ் ஆனாலும் அது அவர்களின் ரசிகர்களுக்குப் பண்டிகைதான். அப்படி இருக்கையில் பண்டிகைக் காலத்தில் ரிலிஸானால் சொல்லவா வேண்டும் ? அதிகாலைக் காட்சி, நள்ளிரவுக் காட்சிகள் எனதிரையிட்டு திரையரங்கங்கள் வசூலை அள்ளிவிடும்.

தமிழக அரசு சார்பில் பண்டிகைக் காலங்களோ அல்லது பெரிய நடிகர்களின் படங்கள் ரிலிஸோ எதுவானாலும் ஒரு நாளைக்கு 5 காட்சிகளுக்கு மேல் திரையிடக்கூடாது எனற சட்டமும் இதற்கு ஒரு இடையூறாக இருப்பதாகக் கூறப்படுகிறது. சிறப்புக்காட்சிகள் திரையிடுவதின் மூலம் தியேட்டர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சில தியேட்டர்களில் நள்ளிரவுக் காட்சிகள் மற்றும் அதிகாலை 4 மணிக் காட்சிகள் என திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஜனவரி 9 ஆம் தேதி செய்தியாளர்களிடம் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை என அறிவித்தார். அதனால் சில திரையரங்கங்கள் சிறப்புக் காட்சிகளை ரத்து செய்தனர். ஆனாலும் சில தியேட்டர்கள் சட்டத்த்திற்குப் புறம்பாக சிறப்புக் காட்சிகள் திரையிட்டுள்ளனர்.

இதற்குப் பதிலடியாக தமிழக அரசு சார்பில் ’சம்மந்தப்பட்ட திரையரங்க உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், முதல் கட்டமாக அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க  நடவடிக்கை எடுக்கப்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் அனுமதியின்றி பேட்ட மற்றும் விஸ்வாசம் படத்தினை சிறப்புக்காட்சிகளாக ஓட்டிய திரையரங்கங்கள் அபராதம் செலுத்த வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாகியுள்ளன.