வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 30 ஜனவரி 2016 (15:52 IST)

நடனமாட தெரியாத நடிகர்களுக்கும் நடன அசைவுகளைக் கொண்டுவந்த பி.லெனின்

நடனமாடத் தெரியாத நடிகர்களையும் படத்தொகுப்பு உத்தியால் நடன அசைவுகளைக் கொண்டுவந்தவர் படத்தொகுப்பாளர் B. லெனின் அவர்களின் பொன்விழா ஆண்டு இது.
 

 
தமிழ் சினிமாவில் இயக்குனர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் உள்ளிட்டவர்களுக்கு இருந்த தனிமதிப்பு படத்தொகுப்பாளர்களுக்கு இருந்ததில்லை. படத்தொகுப்பாளர்களின் பெயர் போஸ்டர்களிலும் அச்சிடப்பட்டதில்லை.
 
ஆனால், உதிரிப்பூக்கள் திரைப்படத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த படத்தொகுப்பாளரின் பெயர்தான் முதன் முதலாக போஸ்டர்களில் அச்சிடப்பட்டன. படத்தொகுப்பாளர்களுக்கு அதுவரை கிடைத்திராத அங்கீகாரம், இவரது வருகைக்குப் பின்னர் கிடைக்க ஆரம்பித்தது. அவர்தான் B. லெனின்.
 
தமிழில் வெளியான பல்வேறு திரைப்படங்களை தன்னுடைய படத்தொகுப்பு உத்தியினால், வெற்றிபெறச் செய்தவர். நடனமாடத் தெரியாத நடிகர்களையும் படத்தொகுப்பு உத்தியால் நடன அசைவுகளைக் கொண்டுவந்தவர். தமிழில் முதன்முதலாக சுயாதீனத் திரைப்பட இயக்கத்தை ஒரு அலையாகத் தோற்றுவித்தவர்.
 
இவர் திரைக்கு வந்து ஐம்பதாண்டுகள் ஆகியும் இன்னமும் வேகம் குறையாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறார். ஐந்து தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். இன்னமும் பல மொழிகளிலும் படத்தொகுப்பு செய்துகொண்டிருக்கிறார். தற்போது தமிழில் புதிய இளைஞர்களின் திரைப்படங்களுக்கு மட்டுமே படத்தொகுப்பு செய்துவருகிறார்.
 
சில நேரங்களில் படத்தொகுப்பு செய்ததற்கு பணம் வாங்காதது மட்டுமின்றி அந்த திரைப்படம் வெளியாவதற்கு தனது சொந்த பணத்தையும் கொடுத்து உதவியிருக்கிறார். அம்பேத்கர் திரைப்படம் தமிழில் வெளியாவதற்கு இவர் மேற்கொண்ட முயற்சிகள் பரவலாக எல்லோராலும் அறியப்பட்டவையே.
 
ஐம்பதாண்டுகளாக தமிழ் திரையில் பெரிய இயக்குனர்கள், பெரிய திரைப்படங்கள் என படத்தொகுப்பு செய்தும் இதுவரை தனக்கென சொந்தமாக ஒரு வாகனம் கூட வைத்துக்கொள்ளாதவர்.
 
சினிமா தொடர்பான எந்த நிகழ்விற்கு எந்த ஊருக்கு அழைத்தாலும் தனது சொந்தப் பணத்திலேயே பேருந்து அல்லது ரயிலில் வந்து செல்பவர். படத்தொகுப்பாளர், இயக்குனர் தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி, தமிழில் புதியவகை சினிமாக்களை உருவாக்கும் கள செயற்பாட்டாளராகவும் இருந்துவருகிறார்.
 
ஐம்பதாண்டுகளைக் கடந்து நூற்றாண்டை நெருங்கும் வரை B. லெனின் அவர்களது சேவை தமிழ் சினிமாவிற்குத் தேவை.

நன்றி : Arun Mo