1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 13 பிப்ரவரி 2016 (10:40 IST)

மாறுபட்ட கதைக் களத்தில் உருவாகும் நகைச்சுவைப் பேய்ப்படம் - துப்பார்க்கு துப்பாய

மாறுபட்ட கதைக் களத்தில் உருவாகும் நகைச்சுவைப் பேய்ப்படம் - துப்பார்க்கு துப்பாய

சென்னையை மையமாகக் கொண்ட விடிவெள்ளி வென்ச்சர்ஸ் திரைப்பட நிறுவனம் தயாரித்து வரும் புதிய திரைப்படத்துக்கு ‘துப்பார்க்கு துப்பாய’ என்று பெயரிடப்பட்டுள்ளது.


 
 
தற்போதைய காலகட்டத்தில் பேய்ப் படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகின்றன. நட்சத்திர நடிகர் - நடிகையர் பலரும் பேய்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், புதிய கோணத்தில், வித்தியாசமான கதைக்களத்தில் ‘துப்பார்க்கு துப்பாய’ என்ற புதிய நகைச்சுவைப் பேய்ப் படம் உருவாகி வருகிறது.
 
இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக மகேந்திரன் ராமன் நடித்துள்ளார். மலேசியாவில் ‘வெண்ணிற இரவுகள்’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ள மகேந்திரன் ராமன், மலேசிய தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றவர். முதன் முறையாக தாய்த் தமிழ்நாட்டில் தயாராகும் படத்தில் இவர் அறிமுகமாகிறார். ராப் எனப்படும் ‘ரிதம் அன்ட் போயட்ரி’ வகை பாடல்கள் பாடுவதிலும் உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றவர், மகேந்திரன் ராமன்.
 
இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார், விஜய் டி.வி.யின் ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற ஆனந்தி. அண்மையில் வெளியான ‘தாரை தப்பட்டை’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் ஆனந்தி இடம் பிடித்திருந்தார்.
 
‘துப்பார்க்கு துப்பாய’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் அறிமுகமாகிறார், ரியா. இவர்களுடன் அபரஜித், ஜெய் கணேஷ், மகா தாரா, ராகவன், கிஷோர், தயாளன் போன்றவர்களும் நடித்துள்ளனர்.
 
படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருப்பவர், ராஜ ராஜன். சின்னத்திரை செய்தித் துறையில் நெடிய அனுபவம் கொண்ட இவர், ‘துப்பார்க்கு துப்பாய’ திரைப்படத்தின் ஐந்து பாடல்களையும் இயற்றி இருக்கிறார். படத்திற்கு இசை அமைத்திருப்பவர், டி.கே. இமானுவேல். சோலைராஜா ஒளிப்பதிவு செய்ய அருண் பிரசாத் படத்தொகுப்பை கவனித்துள்ளார். அதிநவீன தொழில்நுட்பத்துடன் வியக்க வைக்கும் க்ராஃபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ள ‘துப்பார்க்கு துப்பாய’ திரைப்படத்தை விடிவெள்ளி வென்ச்சர்ஸ் நிறுவனத்துக்காக ஜானகி தருமராசன் தயாரித்துள்ளார்.
 
படப்பிடிப்பு சென்னை, வேலூர், ஆந்திரா, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் இயற்கை அழகு கொஞ்சும் பகுதிகளில் நடந்து நிறைவடைந்துள்ளது. படத்தின் இறுதிக்கட்ட ஆக்கப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
 
அதிரடி திருப்பங்களுடன், இளைஞர்களை கவரும் வகையில் ‘துப்பார்க்கு துப்பாய’ திரைப்படத்தின் காட்சிகள் அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர், படக்குழுவினர். அண்மையில் ‘வாட்ஸ் அப்’ மூலம் இளைஞர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவத்தை மையமாகக் கொண்டு ‘துப்பார்க்கு துப்பாய’உருவாகி இருப்பதாகவும் படக்குழுவினர் கூறியுள்ளனர்.