1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வெள்ளி, 1 ஆகஸ்ட் 2014 (16:42 IST)

ரஜினி படித்த பள்ளியை கேவலப்படுத்திட்டார் - தனுஷ் மீது புதிய குற்றச்சாட்டு

வேலையில்லா பட்டதாரி தறிகெட்டு ஓடுகிறது. அதேபோல் படம் குறித்த குற்றச்சாட்டுகளும்.
படம் நெடுக தனுஷ் சிகரெட்டை ஊதித் தள்ளுகிறார். போஸ்டரிலும் ஊதுகிறார். இதை எப்படி தணிக்கைக்குழு அனுமதித்து யு சான்றிதழ் தந்தது என்று புகையிலைக்கு எதிரான இயக்கம் புகார் தந்துள்ளது. போலீஸ் கமிஷனிடம் தந்த புகாருக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் படம் குறித்து மற்றுமொரு புகார்.
வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் வெட்டி ஆபிசர். அவரது தம்பியோ கை நிறைய சம்பளம் வாங்கும் ஐடி ஊழியர். அப்பா சதா தனுஷை கரித்துக் கொட்ட, ஒரு சந்தர்ப்பத்தில், தம்பியை மாதிரி என்னை செயின்ட் ஜோ‌ன்ஸ் பள்ளியிலா படிக்க வச்சீங்க? ராமகிருஷ்ணா மிஷன்லதானே படிக்க வச்சீங்க. அங்க படிச்சதுனால சரளமாக இங்கிலீஷ் பேச முடியலை, வேலையும் கிடைக்கலை என்று கூறுவார்.

இந்த வசனம் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படிப்பவர்களையும், படித்தவர்களையும் புண்படுத்திவிட்டதாம். ரஜினிகாந்தே எங்க பள்ளியில்தான் படித்தார். பிரதமர் மோடி ராமகிருஷ்ணா பள்ளியில் இரண்டு வருடம் சர்வீஸ் பண்ணியிருக்கார். இங்க படிச்ச பலபேர் டாக்டர், கலெக்டர், ஐபிஎஸ், ஐஏஎஸ்-னு ஆகியிருக்காங்க. இந்தியா முழுக்க 150 கல்வி நிறுவனங்களுடன் இயங்கி வரும் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளிகளுக்கு இது இழுக்கு என்று குரல் எழுந்துள்ளது.
ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படித்து உயர் பதவியில் இருப்பவர்களுக்கு இந்த வசனம் மன வருத்தத்தை தந்திருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவர்கள் சொல்லும் இன்னொரு விஷயம்தான் நெருடல்.
 
ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படித்த மாணவர்கள் ஒழுக்கமாக இருப்பார்கள். ஆனால் படத்தில் தனுஷ் வயிறு முட்ட சாராயம் குடித்து சிகரெட்டை புகைத்து தள்ளுகிறார் என்று கூறியுள்ளனர். ராமகிருஷ்ணா பள்ளியில் படித்த யாரும் மது அருந்த மாட்டார்களா இல்லை சிகரெட் புகைக்க மாட்டார்களா? அட, இவங்க ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியின் பெருமையாக சுட்டிக் காட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே இந்த இரண்டையும் கொஞ்ச நாள் முன்புவரை செய்தவர்தானே.
 
தங்களின் பள்ளியின் பெருமையை காக்கும் பொருட்டு வழக்கு தொடர்ந்தாவது குறிப்பிட்ட வசனத்தை மாற்றுவோம் என்கிறார்கள் பள்ளியின் முன்னாள் மாணவர்கள். 
 
அதற்குள் படம் ஓடி தியேட்டரிலிருந்து தூக்கிவிடுவார்களே?