வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (10:57 IST)

சித்ரா சேச்சி இது சரியா...?

கலையில் மத, இன, மொழி பாகுபாடெல்லாம் கூடாது என்பது எப்போதும் ஏட்டுச்சுரைக்காய்தான். கலையுலகில் நடக்கும் உள்ளடி வேலைகள் வெளியுலகைவிட மோசம்.
 
சமீபத்தில் மலையாள சேனலுக்கு பாடகி சித்ரா அளித்த பேட்டி சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. மலையாள இசையமைப்பாளர்கள் மலையாளிகளுக்கு வாய்ப்பளிப்பதில்லை. ஏன் ஸ்ரேயா கோஷலுக்கு மட்டும் வாய்ப்பளிக்கிறார்கள் என்று கேட்டிருந்தார். 
 
சித்ராவின் கேள்வி ஒருவகையில் சரி. இன்னொரு வகையில்...? 
 
மலையாளிகளான சித்ரா, யேசுதாஸ் போன்றவர்கள்தான் தமிழ் சினிமாவில் கோலோச்சினார்கள். பாலசுப்பிரமணியம்கூட ஆந்திராவைச் சேர்ந்தவர்தான். சித்ராவுக்குதான் மற்ற பாடகர்களைவிட அதிக வாய்ப்புகள் தமிழில் தரப்பட்டன. அவரைப் போல் மொழி வேறுபாடு பார்த்திருந்தால் சித்ராவால் இப்படியொரு உன்னத நிலையை அடைந்திருக்க முடியுமா? 
 
தமிழில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் பெற்ற போது, மலையாளியான எனக்கு வாய்ப்பு தராமல், தமிழ் நாட்டைச் சேர்ந்த பாடகிகளுக்கு வாய்ப்பு தாருங்கள் என சித்ராவால் சொல்ல முடிந்ததா? எனில் இப்போது மட்டும் ஏன் இந்த அங்கலாய்ப்பு? இவ்வளவுக்கும் ஸ்ரேயா கோஷலை மலையாளத்தைவிட தமிழில்தான் அதிகம் பாட அழைக்கிறார்கள்.
 
விட்டுக் கொடுப்பதில் உள்ள பரந்த மனம் மொழி வேறுபாடு பார்க்கையில் குறுகிவிடுகிறது.
 
தமிழர்களின் மனதோடு கலந்த சின்னக்குயிலிடம் இப்படியொரு ஸ்டேட்மெண்டை எதிர்பார்க்கவில்லை.