வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2016 (10:10 IST)

காவிரி பிரச்சனை... பாரதிராஜா காட்டமான அறிக்கை

காவிரி பிரச்சனை... பாரதிராஜா காட்டமான அறிக்கை

காவிரி பிரச்சனை தொடர்பாக பாரதிராஜா காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். "காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, தமிழர்கள் மீதும், தமிழர்களின் உடைமைகள் மீதும் கொலை வெறிதாக்குதல் நடத்தியும், வாகனங்களுக்கு தீ வைத்தும், கர்நாடக அரசுடன் அரசியல் கட்சிகளும், கைகோர்த்துக்கொண்டு எங்கள் மக்கள் மீது இனவெறியுடன் தாக்குதல் நடத்துகின்ற கர்நாடக அமைப்புகளின் செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது.

 
ஒருவார காலமாக தமிழ்நாடு, கர்நாடக எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவிய நிலையிலும், பெங்களூருவில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் கலவரங்களை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசின் செயல்பாடு கொஞ்சம் வேதனைக்குரியது. இதற்கு மேலும் தாக்குதல் நடத்தா வண்ணம், காவிரி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு உடனே தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
 
தமிழகம் இன்று வரை வந்தாரை வாழவைக்கும் தமிழகமாகத்தான் இருந்து வருகிறது. துண்டு துண்டாக கிடந்த தேசத்தை இணைத்தது ஒரு தலைவன். இணைந்த தேசத்தை சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவன் ஒரு தலைவன். வாங்கிய சுதந்திரத்தை வளமாக்குகிறோம் என்று வரிந்துகட்டி நிற்கும் இந்த நாட்டின் பல நூறு தலைவர்களே தயவு செய்து இந்த பிரச்சனையில் ஒரு நல்ல தீர்வு காணுங்கள். கட்சி பேதமற்று அரசியல் நோக்கமற்று இதில் தீர்வு காண வேண்டும். இது உங்கள் கையில் இருக்கிறது.
 
தமிழன் தமிழ்நாட்டிலேயே மைனாரிட்டியாக இருக்கிறானோ என்ற சந்தேகம் எழுகிறது. கர்நாடகாவில் வாழும் பல லட்சம் தமிழர்களுக்கு உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது மத்திய மாநில அரசின் தலையாய கடைமையாகும் என்பதை உணர வேண்டும். சட்டம் - ஒழுங்கு சீரழிந்திருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.
 
144 தடை உத்தரவுக்கு பிறகும் இத்தகைய பெரிய கலவரங்களும், பஸ் எரிப்பும் இன துவேசத்தைத்தான் வளர்க்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அங்கே வாழும் பல லட்சம் தமிழர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதை எங்கள் உணர்வுகளை அடக்கிக் கொண்டு பவ்யமாக கேட்டுக்கொள்கிறோம்.
 
இந்திய தேசத்தின் விடுதலைக்காக மாவீரன் சுபாஷ் சந்திரபோஸ் படையில் நின்று போரிடுவதற்காக... பர்மா வாழ் தமிழர்களும், தமிழ்நாட்டு தமிழர்களும் பல லட்சம் பேர் திரண்டு நின்று போரிட்டு இருக்கிறார்கள் என்பது வரலாறு தெரிந்தவர்களால் மறுக்க முடியாது.
 
இந்த தேசத்தின் தந்தையான மகாத்மா காந்தியடிகள் அவர்களை ஆப்பிரிக்காவில் சுட்டபோது அவர் உயிரினை கொல்ல வந்த குண்டினை நெஞ்சினில் தாங்கி உயிர்விட்டவன் தமிழன். அடுத்த பிறவி ஒன்று இருந்தால் நான் தமிழனாக பிறக்க வேண்டும் என்று ஆத்மார்த்தமாக பேசியவர்கள் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களும் மகாத்மா காந்தியடிகளும் என்பது எங்களை சிதைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு தெரியாதது அல்ல.
 
கார்கில் யுத்தத்தில் அதிகம் உயிர் தியாகம் செய்தவர்கள் தமிழர்கள். பீகார் வெள்ளமாக இருந்தாலும் குஜராத்தில் பூகம்பாக இருந்தாலும் இந்த தேசத்தில் முதன் முதலில் அள்ளிக் கொடுத்து தங்களது தேசிய பாசத்தை வெளிக்காட்டியது எங்களது தமிழர்களே.
 
சமீபத்தில் நடந்த இன அழிப்பில் ஒன்றரை லட்சம் பேரை இழந்து சொல்ல முடியாத அளவுக்கு துயரத்தில் இருந்த சூழலில், மரம் வெட்ட வந்தவர்களை தண்டிக்கிறோம் என்கின்ற பெயரில் ஆந்திராவில் 20 தமிழர்களை சுட்டுக்கொன்றார்கள். முல்லை பெரியாறு பரம்பிக்குளம் அணைப்பிரச்சினையில் எங்கள் தமிழர்களை தாக்குவதும், தற்போது காவிரி நதிநீர் பிரச்சினையில் எங்களது தமிழர்களின் கோடிக்கணக்கான உடைமைகளை சிதைத்தும், தமிழர்களை அடிப்பதும் என்பது நாங்கள் இந்த தேசத்தில்தான் இருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.
 
இந்திய அரசு இதுவரை இந்த பிரச்சினையில் தலையிடாதது பெருத்த வருத்தத்தை ஏற்படுத்துவதோடு, 500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தேசத்தில் உள்ள ஒவ்வொரு தேசிய இனங்களும் தனித்தனியாக தங்களை தாங்களே ஆண்டது போல், நாங்களே ஏன் எங்களை ஆண்டுக்கொள்ளக்கூடாது? என்ற கேள்வியை எங்களது இளைஞர் மனதில் நீங்களே விதைத்துவிடாதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். நிலைமை மோசமடைவதற்கு முன்னால் மத்திய மாநில அரசுகள் தங்களது கடமையை சரிவர செய்து அமைதியை ஏற்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.
 
இவ்வாறு பாரதிராஜா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.