வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 5 மார்ச் 2015 (09:58 IST)

1000 படங்களின் இசை மற்றும் பாடல்களின் உரிமையை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தாரைவார்த்த இளையராஜா

உலகில் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இசைஞானி இளையராஜா. கடந்த 1970-ஆண்டு முதல் இதுநாள் வரை 1000 படங்களுக்கு மேலும், 4500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கும் மெட்டமைத்துள்ளார்.
அவரது இசையில் அமைந்துள்ள பாடல்களை அவருடைய அனுமதியின்றி சில நிறுவனங்கள் விற்பனை செய்து வருவதாக கடந்த ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகி, அவரது பாடல்களை விற்பனை செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஐகோர்ட்டு நிரந்தர தடை விதித்துள்ளது. 
 
இந்நிலையில், இளையராஜா தனது பாடல்களின் உரிமையை தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வழங்கினார். தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான கலைப்புலி தாணுவிடம் அவருடைய 1000 படங்களின் பாடல்கள் உரிமைகள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
 
நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியின் போது பத்திரிகையாளர்களிடம் பேசிய இளையராஜா, "இனிமேல் என்னுடைய இசையை அதிகாரப்பூர்வமாக உலகளவில் எந்தவொரு மொபைல் நிறுவனமும், உலகளாவிய இணையதளங்களிலும், யூடியூப், டெய்லி மோஷன் போன்ற இன்னும் பல வீடியோ இணையதளங்களிலும், ஆடியோ, வீடியோ விளம்பரங்களிலும், ரீமிக்ஸ் செய்யவோ, எப்.எம்., டிவியில் ஒலி , ஒளிபரப்பவோ, மேடை நிகழ்ச்சிகள் மற்றும் பொது இடங்களில் முறையற்ற வகையில் இசையை உபயோகிக்கவோ தயாரிப்பாளர் சங்கத்தில் முறையான அனுமதி பெற வேண்டும். விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.