வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 31 மே 2020 (12:44 IST)

சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வேண்டும்! – முதல்வரிடம் பாரதிராஜா கோரிக்கை!

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதியளித்துள்ள நிலையில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்க பாரதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை முதல் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் சில தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது. சின்னத்திரை படப்பிடிப்புகளை அதிகபட்சம் 20 பேர் மட்டும் வைத்து நடத்தலாம் என்று அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 60 பேர் வரை படப்பிடிப்பு பணிகளில் ஈடுபடலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பிற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள இயக்குனர் பாரதிராஜா இதேபோன்று சினிமா படப்பிடிப்புகளுக்கும், திரையரங்கங்கள் செயல்படவும் அனுமதி வழங்க வேண்டுமென கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் “சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதியளித்ததில் மகிழ்ச்சி. அதுபோலவே சினிமா படப்பிடிப்புகளுக்கும், திரையரங்கங்கள் திறப்பதற்கும் அனுமதி அளிக்க வேண்டும்.

திரையரங்குகள், விநியோகஸ்தர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள். பல தொழிலாளர்கள் உணவுக்கே சிரமப்படும் நிலையில், தயாரிப்பாளர்களும் வட்டி கட்ட முடியாமல் திணறி வருகின்றனர். சினிமாவை நசிந்து விடாமல் காக்க வேண்டிய அவசியம் உள்ளது. அரசு அனுமதியளித்தால் அரசின் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முறைகளை பின்பற்றி படப்பிடிப்புகளை நடத்துவோம்” என தெரிவித்துள்ளார்.