வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 23 அக்டோபர் 2018 (15:49 IST)

அப்ரோச் பண்றது என் ரைட்ஸ் – மி டூ குறித்து லிவிங்ஸ்டன் சர்ச்சை கருத்து

பொது சமூகத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வரும் மி டூ இயக்கம் குறித்து நடிகரும் இயக்குனருமான லிவிங்ஸ்டன் சர்ச்சையான கருத்துகளைக் கூறியுள்ளார்.


கடந்த 2 வாரங்களில் இந்தி சினிமாவிலும் தமிழ் சினிமாவிலும் மி டூ விவகாரம் பெரும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. இந்தியா முழுவதும் பல பிரபல நடிகர்கள், இயக்குனர்கள், பாடலாசிரியர்கள் என பலரும் மி டூ வில் சிக்கியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் அத்துமீறல் புகார் தெரிவித்ததை அடுத்து வரிசையாக பல பிரபலங்களின் பெயர்களைப் பெண்கள் வெளியிடத் தொடங்கி உள்ளனர். இதையடுத்து பாலியல் புகார் தெரிவித்த பெண்களுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்புகளும் சேர்ந்தே வருகின்றன. புகார் கூறப்பட்டுள்ளவர்களில் இயக்குனர் சுசி கணேசன் மட்டும் தன் மீது புகார் கூறிய இயக்குனர் லீனா மணிமேகலை மீது மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். மற்றவர்கள் இதுவரை எந்த பதிலும் சொல்லாமல் மௌனம் காத்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான லிவிங்ஸ்டன் இந்த மி டூ இயக்கம் குறித்து தனது கருத்தினைக் கூறியுள்ளார். இது சம்மந்தமாக ஒரு தனியார் இணையதள தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலில் ‘செக்ஸ் என்பது மனிதர்களின் அடிப்படை உணர்ச்சியாகும். ஒரு ஆண் பெண்ணிடமோ அல்லது அல்லது பெண் ஆணிடமோ செக்ஸ் சம்மந்தமாக அணுகுவது அவரவர் உரிமை. அதை ஏற்பதும் நிராகரிப்பதும் அந்தந்த தனிநபரின் விருப்பம். எப்போதோ நடந்த சம்பவத்திற்கு இப்போது குறை சொல்வது தேவையில்லாதது. அப்படிப் பார்த்தால் சினிமாவில் உள்ள அத்தனைப் பேரையும் பிடித்து சிறையில்தான் தள்ள வேண்டும், என்னையும் சேர்த்து. இது சினிமாவில் மட்டும்தான் உள்ளதா? இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத ஏதேனும் ஒரு துறையைக் காட்டுங்கள் பார்க்கலாம்?. ஒரு ஆண் பத்து பெண்களிடம் போனால் பொம்பள பொறுக்கி..பெண்களிடம் செல்லவில்லை என்றால் அவனை பேடி என்பார்கள். நாட்டில் இதைவிட முக்கியமான பிரச்சனைகள் உள்ளன. அதையெல்லாம் விட்டுவிட்டு இதை பேசுவது அசிங்கமாக உள்ளது. சினிமா என்பது உணர்வுகளை வெளிப்படுத்தும் வேலை. அதில் பணிபுரிபவர்கள் சிலர் அதீத உணர்வு உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். அதையெல்லாம் கட்டுப்படுத்த முடியாது.’ எனக் கூறியுள்ளார்.