1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : சனி, 10 மே 2014 (18:58 IST)

'ரீங்காரம்' - மனித உணர்வியல் பேசும் படம்

ஏராளமான சுவாரஸ்யங்கள், எதிர்பாராத திடீர் திருப்பங்கள், எண்ணமுடியாத சுகதுக்கங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதுதான் மனித வாழ்க்கை.
 
ஊகிக்கமுடியாத இயல்பால்தான் ஷேக்ஸ்பியர் 'முட்டாள் ஒருவனால் எழுதப்படுவதே வாழ்க்கை' என்று கூறினார்.
 
எங்கிருந்தோ வந்து விழுகிற  ஒரு கல், குளம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்துவதைப் போல, வாழ்க்கையில் குறுக்கிடும் சம்பந்த மில்லாதவர்களால் சந்திக்கும் அதிர்வலைகளைச் சொல்கிற படம்தான் 'ரீங்காரம்'. வண்டு பறக்கும் போது பரவும் ரீங்காரம் வாழ்க்கை நடக்கும் போதும் ஏற்படும் என்பதை சொல்கிறது இப்படம்.
 
ஜே ஸ்டுடியோஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் புதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகும் இப்படத்தை சிவகார்த்திக் இயக்குகிறார்.
 
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரிடம் மட்டுமல்ல அவரது சீடர்கள் சி.ஜே. பாஸ்கர், சமுத்திரக்கனியிடம் மட்டுமல்ல மூர்த்தி, 'அரசு' சுரேஷ் போன்ற இயக்குநர்களிடமும் உதவி, இணை இயக்குநராகப் பணிபுரிந்து பரந்துபட்ட அனுபவங்களைப் பெற்றுள்ள சிவகார்த்திக் இயக்கும் முதல் படம்தான் 'ரீங்காரம்'. 
 
கதையின் மையமாக நான்கு பாத்திரங்கள் நகர்கின்றன. ஒருநாள் காலை முதல் மாலைவரை சில சம்பவங்களை நிகழ்த்துகின்றன. ஒருவரால் ஒருவருக்கு நேரும் அதிர்வலைகள் என்னமாதிரியான பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை இப்படம் சொல்கிறது. 4 பேர் ஒரு நாள்.. இதுதான் கதை.
 
நாயகன் கைலாஷ் நல்லவன். பணக்கார வீட்டுப் பையன் என்றாலும் எது செய்தாலும் இதனால் யாருக்கும் பாதிப்பு வருமோ என்று சிந்திப்பவன். காதலியை மட்டும் அடிக்கடி சந்திப்பவன். 
 
நாயகி கவிதா ஒரு ஷாப்பில் மாலில் வேலைபார்ப்பவள். கைலாஷிடம் மனம் பறிகொடுத்தவள்.
 
நாயகனின் அப்பாமுருகேசனோ  கல் குவாரி முதலாளி .சுயநலக்காரர்.. நமக்கு நல்லது நடக்கும் என்றால் நாலுபேரைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. என்கிற கொள்கை கொண்டவர்.
 
இன்னொருவர் ஒய்வு பெற்ற ராணுவவீரர்.வாழ்வில்துர்ப்பாக்கியம் இருந்தாலும் இவர் கையில் ஒரு துப்பாக்கி இருக்கும்.ஓர் அறைக்குள் முடங்கி தனிமையில் புதைந்து தனியான உலகத்தில் வாழ்பவர். கலக்கமும் கழிவிரக்கமும் அச்சமும் அவரை ஆட்டிப் படைக்கின்றன. 
 
''இந்த நான்கு பாத்திரங்கள் ஒன்றுக்குள் ஒன்று ஏற்படுத்தும் நல்ல கெட்ட அதிர்வலைகள்தான் படம் பயணிக்கும் பாதை'' என்கிறார் இயக்குநர் சிவகார்த்திக்.
 

கைலாஷாக பாலா நடிக்கிறார். இவர் ஒளிப்பதிவாளர் தினேஷிடம் ஒளிப்பதிவு உதவியாளராக பல படங்களில் பணியாற்றியவர். இயக்குநருக்கு நண்பர். பொருத்தமாக இருந்ததால் பயிற்சி கொடுத்து நடிக்க வைத்துள்ளார்கள்.
 
கவிதாவாக 'கங்காரு' பிரியங்கா நடிக்கிறார். முருகேசனாக கலாபவன் மணி. வில்லனா காமெடியனா என்று யூகிக்க முடியாத பாத்திரத்தில் வந்து கல கலப்பு மணியாக திகிலூட்டுகிறார்.
 
ராணுவவீரராக 'ஆடுகளம்' வ.ச.ஐ.ஜெயபாலன் அசத்துகிறார்.
 
கதை நிகழ்விடம் திருச்சியும் திருச்சியைச் சார்ந்த கிராமங்களும். இது தவிர சென்னையிலும் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. 40 நாட்கள் திட்டமிடப்பட்டு இதுவரை 12 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது.
 
படத்தின் திரைக்கதை உத்தியால் கவரப்பட்ட தயாரிப்பாளர் அதற்காகவே இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.
 
இப்படம் நிச்சயம் புதுமையான திரைக்கதை கொண்டதாக இருக்கும். என்று நம்பிக்கை தெரிவிக்கும் இயக்குநர், பெரும்பாலான படங்களில் வரும் 'வெத்து' பைட்டு, குத்துப்பாட்டு, குடிக்கிற புகைக்கிற காட்சிகள் எதுவும் இப்படத்தில் இல்லை என்று கூறி பெரும் ஆறுதல் தருகிறார்.
 
படத்தின் ஒளிப்பதிவாளர் இனியன் ஹாரிஸ் இவர் ஆர்தர் வில்சனின் உதவியாளர். இசை அலிமிர்சா. இவருக்கு இசையில் இது.'ஆதார்' படத்துக்கு அடுத்தபடம் . 
 
கதை திரைக்கதை வசனம் இயக்கம் சிவகார்த்திக் 
 
மூன்றே மாதங்களில் முழுப்படம் என்கிற இலக்குடன் பரபரப்பாக இயங்கி வருகிறது படக்குழு. 
 
"இது புதியவர்களுக்கு வர வேற்பு தரும் காலம். புதிய முயற்சிகளுக்கும் ஆதரவு தருகிற சூழல். இப்படத்தின் திரைக்கதை நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும்.அதன் பாதையும் பயணமும் கவரும்படி இருக்கும்  சம்பவக் கோவைகள் அழகாக தொடுக்கப்பட்ட விறுவிறுப்பூட்டும் திரைக்கதை  இது. பின்னணி இசையிலும் படம் பேசப்படும். உண்மையான வண்டின் ரீங்காரம் பின்னணி இசையில் பயன்படுத்தியுள்ளது பலரையும் கவரும்."என்கிறார் இயக்குநர்.
 
நம்பிக்கை தரும் நல்ல முயற்சிகள் என்றும் தோற்பதில்லை.