வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : வியாழன், 19 ஜூன் 2014 (15:04 IST)

ரஜினி படம், முட்டி மோதும் தயாரிப்பு நிறுவனங்கள்

ரஜினியை வைத்து படம் செய்ய பிரமாண்ட தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுக்குள் போட்டி போடுகின்றன. 100 கோடிக்கு மேல் செலவு செய்து, அசலுடன் லாபத்தையும் அள்ள தமிழக அளவில் நம்பிக்கைக்குரிய ஒரே நட்சத்திரம் ரஜினி மட்டும்தான்.
லிங்கா படத்துக்குப் பிறகு ரஜினி மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க அதிக சாத்தியமுள்ளது. அதனை உலகுக்கு முதலில் தெரியப்படுத்தியவர் ஜென்டில்மேன் படத்தை தயாரித்த கே.டி.குஞ்சுமோன். ரஜினியுடனான தனது நட்பையும், அது சின்ன கருத்து வேறுபாட்டால் முறிந்ததையும் சமீபத்தில் மீடியாவில் தெரியப்படுத்தினார். அப்போது, நான் அறிமுகப்படுத்திய ஷங்கர் இப்போது மிகப்பெரிய ஆளாக வளர்ந்து நிற்கிறார். அவரும் ரஜினியும் மீண்டும் இணைந்து படம் செய்வது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறியிருந்தார்.
 
ஷங்கருக்கு எந்திரன் 2 எடுக்கும் ஐடியா உள்ளது. ரஜினிக்கும் அப்படியொரு விருப்பம் உள்ளது. எந்திரன் 2 தயாரானால் அது இதுவரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படங்களில் அதிக செலவு பிடிக்கும் படமாக இருக்கும். அந்தப் படத்தை தயாரிக்கும் முனைப்பு பல தயாரிப்பு நிறுவனங்களிடம் உள்ளது. முக்கியமாக ஈராஸ் நிறுவனமும், ரிலையன்ஸும் எந்திரன் 2-க்கு அடிபோடுகின்றன. சன் பிக்சர்ஸுக்கும் விருப்பம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

எந்திரன் படத்தை ஐங்கரன் தொடங்கி அவர்களால் செலவு கட்டுப்படியாகாமல் போக சன் பிக்சர்ஸ் படத்தை தயாரித்தது. அதேபோல் ஒரு நிலைமை ஏற்படாமல் இருக்க ரிலையன்ஸ்தான் பாதுகாப்பான நிறுவனம். மேலும் ஷங்கர் இயக்கிவரும் ஆஸ்கர் பிலிம்ஸின் ஐ படத்தையும் வாங்க ரிலையன்ஸ் ஆர்வம் காட்டுகிறது. செலவுகளால் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் படத்தை ரிலையன்ஸுக்கு கைமாற்றிவிட அதிக வாய்ப்புள்ளது.
ரஜினியின் அடுத்தப் படத்தை ஏஜிஎஸ் தயாரிக்கும் என்ற பேச்சும் இருந்தது. ரஜினியின் அடுத்த படம் எந்திரன் 2 என்ற செய்தி வெளியான பிறகு, அவ்வளவு பெரிய பட்ஜெட் தாங்காது என்று அந்த நிறுவனம் தானாகவே போட்டியிலிருந்து விலகிக் கொண்டது.
 
யார் தயாரித்தாலும் எந்திரன் 2 கண்டிப்பாக உருவாகும் என்பதில் உறுதியுடன் இருக்கிறார்கள் திரையுலகினரும், ரஜினி ரசிகர்களும்.