வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: சனி, 21 ஜூன் 2014 (15:12 IST)

மனித குரங்கு சீஸர் இனி தமிழிலும் பேசும்

1968, 1991 ஆகிய வருடங்களில் த பிளானெட் ஆஃப் த ஏப்ஸ் படங்கள் வெளியாயின. மனித குரங்குகளுக்கு மனிதனின் திறமைகள் கைவருவதுதான் கதை. 
 
2011-ல் ரைஸ் ஆஃப் தி பிளானெட் ஆஃப் த ஏப்ஸ் என்ற பெயரில் இந்தப் படங்கள் ரீபூட் செய்யப்பட்டன. சீஸர் என்ற மனிதனின் திறமைகள், அறிவு கைவரப் பெற்ற மனித குரங்கு பரிசோதனை என்ற பெயரில் குரங்குகளை மனிதர்கள் கொடுமை செய்வதைக் கண்டு கோபமாகி அனைத்து குரங்குகளையும் விடுவித்து காட்டுக்குள் செல்வதுடன் ரைஸ் ஆஃப் த பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ் நிறைவடைந்தது. 
தற்போது அதன் அடுத்த பாகம் டான் ஆஃப் தி பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ் படத்தை எடுத்திருக்கிறார்கள். தங்கள் குடும்பங்களுடன் காட்டுக்குள் அமைதியாக வாழும் குரங்குக் கூட்டம் மனிதர்களின் தலையீட்டால் மீண்டும் அமைதியை இழக்கின்றன. அவை படையுடன் நகரத்தை நோக்கி கிளம்புகின்றன. இதில் நெற்றியில் காவி நிற குறியுடன் சீஸர் தோன்றுகிறது. இந்தியாவில் குரங்குகள் அனுமானின் வடிவமாகப் பார்க்கப்படுவதால் அதற்கு இப்படியொரு கெட்டப் தரப்பட்டிருக்கலாம்.
 
ஜூலை 11 யுஎஸ், இந்தியா உள்பட பல நாடுகளில் இப்படம் வெளியாகிறது. ஆங்கிலம் மட்டுமின்றி தமிழிலும் படத்தை மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர்.
 
சீஸரின் கர்ஜனையை இனி தமிழிலும் கேட்கலாம்.