1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: திங்கள், 23 ஜூன் 2014 (16:23 IST)

பொங்கல் ஸ்பெஷலாக வரும் விக்ரம் - விஜய் மில்டன் படம்

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் பத்து எண்ணுறதுக்குள்ள படம் 2015 பொங்கல் ஸ்பெஷலாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ படம் முடியும் முன்பே விஜய் மில்டன் படத்தில் கமிட்டானார் விக்ரம். முதல் ஷெட்யூல் முடிந்து இரண்டாவது ஷெட்யூல் சென்னையில் தொடங்கியுள்ளது. ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும், முருகதாஸும் இணைந்து தயாரிக்கிறார்கள். 
 
இவர்கள் இணைந்து எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, ராஜா ராணி படங்களை தயாரித்தனர். எல்லாமே ஓரளவு மீடியம் பட்ஜெட் படங்கள். ஆனால் தற்போது தயாராகிவரும் விக்ரம் - விஜய் மில்டன் படம் பெரிய பட்ஜெட். சுமார் நாற்பது கோடிகள். இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் இவர்கள் இணைந்து படம் தயாரிப்பது இதுவே முதல்முறை. 
 
விக்ரம் ஜோ‌டியாக சமந்தா நடிக்கிறார். சிலர் கூறுவது போல் இந்தப் படத்தில் சமந்தாவுக்கு இரண்டு வேடங்கள் கிடையாது. ஒரே வேடம்தான். இசை இமான், பாடல்கள் மதன் கார்க்கி. ரோடு மூவியான இதில் சண்டைக் காட்சிகளும் சேஸிங் காட்சிகளும் இடம்பெறுகின்றன. அதனை படமாக்க ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்களை வரவழைக்கும் திட்டமும் உள்ளது. 
சென்னையில் தற்போது இரண்டாவது ஷெட்யூல் நடந்து வருகிறது. அது முடிந்ததும் ஹைதராபாத், லடாக், சிக்கிம், பெங்கால் என பல இடங்களில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். படத்தின் கிளைமாக்ஸை துருக்கியில் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
 
டி.இமான் இசையில் இரண்டு பாடல்களின் ஒலிப்பதிவு முடிந்துள்ளது. இரண்டையும் இந்த ஷெட்யூ‌லில் படமாக்க உள்ளனர்.
 
2015 பொங்கல் ஸ்பெஷலாக படத்தை வெளியிடுகின்றனர்.