வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: செவ்வாய், 10 ஜூன் 2014 (14:05 IST)

பாலா‌ஜி சக்திவேலின் ரா... ரா... ரா... ராஜசேகர் - முதல் தகவல் அறிக்கை

வழக்கு எண் படத்துக்குப் பிறகு பாலாஜி சக்திவேல் இயக்கும் படத்துக்கு ரா... ரா... ரா... ராஜசேகர் என்று பெயர் வைத்துள்ளார். இந்தப் பெயரை கேட்டதும் ரா... ராஜ்குமார் படம்தான் நினைவுக்கு வரும்.
 
ரா... ராஜ்குமார் பிரபுதேவா இந்தியில் இயக்கிய படம். ஷாகித் கபூர் சோனாக்ஷி சின்கா நடித்திருந்தனர். ராம்போ ராஜ்குமார் என்றுதான் இதற்கு முதலில் பெயர் வைத்தனர். சில்வஸ்டர் ஸ்டாலோன் நடித்த ராம்போ படத்தை தயாரித்தவர்கள் ராம்போவை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்ததால் படத்தின் பெயர் ரா... ராஜ்குமார் ஆனது.
இந்த கமர்ஷியல் படத்துக்கும் பாலாஜி சக்திவேலின் படத்துக்கும் துளி ஒற்றுமையில்லை. பாலாஜி சக்திவேலின் படம் முற்றிலும் வேறுபட்டது.
 
திக்குவாயால் ஒரு மனிதன் இந்த சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அவர் படமாக்குவதாக கூறப்படுகிறது. அதனை வெளிப்படுத்தும் விதமாக ரா... ரா... ரா.. ராஜசேகர் என்று பெயர் வைத்துள்ளார். இந்தப் படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸுக்காக இயக்குகிறார். வழக்கு எண்ணும் திருப்பதி பிரதர்ஸின் தயாரிப்புதான். இந்தமுறை ஒரு சின்ன வித்தியாசம். திருப்பதி பிரதர்ஸுக்காக ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் பாலாஜி சக்திவேலே தயாரிக்கிறார். அவரது தயாரிப்பு நிறுவனத்துக்கு பாலாஜி சக்திவேல் எஸ்.கே.டாக்கீஸ் என்று பெயர் வைத்துள்ளார்.
 
வழக்கம் போல இந்தமுறையும் புதுமுகங்கள்தான். லிங்குசாமியின் அண்ணன் மகன் பிரதான வேடத்தில் நடிக்க உள்ளார்.