வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Updated : சனி, 14 ஜூன் 2014 (11:51 IST)

தமிழை கொச்சைப்படுத்திய விவேக் - தமிழர் பண்பாட்டு நடுவம் கண்டனம்

நேற்று விவேக் நடித்த நான்தான் பாலா படம் வெளியானது. அதில் பிராமணராக விவேக் நடித்துள்ளார். தான் நடிக்கிற கதாபாத்திரத்தை சிறப்பிக்க, கவனப்படுத்த அந்த கதாபாத்திரம் சார்ந்த பெருமைகளை (அப்படி ஏதாவது இருந்தால்) பொதுவெளியில் முன்வைத்து படத்தையும், தன்னையும், தனது கதாபாத்திரத்தையும் விளம்பரப்படுத்துவது பொதுவாக ஒரு சினிமா நடிகர் செய்வதுதான்.
நான்தான் பாலாவில் பிராமணராக விவேக் நடித்ததால், படத்துக்காக சமஸ்கிருதம் படித்தேன், சொந்தமாக சமஸ்கிருதத்தில் டப்பிங் பேசினேன் என்றெல்லாம் அவர் பத்திரிகைகளில் கூறி வந்தார். படம் வெளியான நேற்று ஒருபடி மேலேபோய் பண்பலை வரிசை ஒன்றில் பேசிய அவர், சமஸ்கிருதம்தான் உலக மொழிகள் அனைத்திற்கும் தாய்மொழி, தமிழ் சமஸ்கிருதத்தில் இருந்துதான் பிறந்தது என்றார். தான் நடித்தப் படத்தில் சமஸ்கிருதம் வருகிறது என்பதற்காக இப்படியொரு அண்டப்புளுகை அவர் அவிழ்த்துவிட வேண்டியதில்லை. விவேக்கின் இந்தப் பேச்சுக்கு தமிழர் பண்பாட்டு நடுவம் கடும் கண்டகம் தெரிவித்துள்ளது.
 
தமிழ் எந்த மொழியின் துணையுமின்றி தனித்தியங்கும் மொழி என்பதை ஆராய்ந்து அறிந்த கால்டுவெல்லின் 200 -வது ஆண்டுவிழாவை கொண்டாடி வரும் இந்த காலகட்டத்தில் விவேக் இப்படியொரு கூற்றை தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
 
2004 -ல் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. ஒரு மொழி செம்மொழி அந்தஸ்தை பெறுவதற்கு பல தகுதிகள் வேண்டும். அதில் முக்கியமானது பிற மொழிகளின் துணையின்றி தனித்து நிற்கும் திறன் அம்மாழிக்கு இருக்க வேண்டும். தமிழுக்கு அந்தத் திறன் இருப்பதாலேயே செம்மொழி அந்தஸ்து தரப்பட்டது.
 
இந்த அடிப்படை உண்மைகள் குறித்த எந்த அறிதலும் இன்றி சமஸ்கிருதம்தான் தமிழின் தாய் மொழி என்று பகிரங்கமாக தமிழை கொச்சைப்படுத்தியுள்ளார் விவேக். அவருக்கு தமிழர் பண்பாட்டு நடுவம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
 
விவேக் தவறை உணர்ந்து தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்.