வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha priya
Last Modified: வெள்ளி, 20 ஜூன் 2014 (11:13 IST)

சிவாஜியே பத்மினியை அடிச்சிருக்கார்...

கோடை மழை படப்பிடிப்பில் இயக்குனர் மு.களஞ்சியம் நடிகை பிரியங்காவின் கன்னத்தில் அறைந்ததில் அவர் மயக்கம் போட்டு விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு காது கேட்பதில் பிரச்சனை இருந்தது. மோசமாக பிரியங்கா பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் அவரை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பிரச்சனையை கிளப்பும் போலிருக்கிறது.
கோடை மழையில் களஞ்சியம் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கிறார். அவரது தங்கையாக பிரியங்கா. பிரியங்கா காதலிக்கும் பையனை களஞ்சியத்துக்கு பிடிக்கவில்லை. இது குறித்து அவர் பிரியங்காவுடன் நடத்தும் வாக்குவாதம் ஒருகட்டத்தில் பிரியங்காவின் கன்னத்தில் அறைவதில் முடிகிறது. இதுதான் எடுக்கப்பட வேண்டிய காட்சி. இந்த காட்சியின் போதுதான் களஞ்சியம் தனது பலத்தையெல்லாம் சேர்த்து பிரியங்காவின் கன்னத்தில் இறக்கியிருக்கிறார். கேட்டால், பிரியங்காவின் டைமிங் மிஸ்ஸாகிவிட்டது. நான் அடிக்கும் போது அவர் கன்னத்தை திருப்பாமலிருந்துவிட்டார் என சொத்தை காரணத்தை சொல்கிறார் களஞ்சியம். காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காகதான் களஞ்சியம் அப்படி அடித்தார் என கோடை மழை படத்தின் இயக்குனர் கதிரவன் முணுமுணுக்கிறார்.
நடிகைகளை அடிப்பதன் மூலம் படங்களில் யதார்த்தத்தை நிலைநாட்டும் இவர்களைப் போன்ற ஆதிக்க மனோபாவம் கொண்டவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். மாறாக இயக்குனர்கள் சங்கம் இவர்களுக்கே கொடி பிடிக்கிறது. சினிமாவில் இதெல்லாம் சகஜம், தில்லானா மோகனாம்பாள் படப்பிடிப்பில் சிவாஜி அடித்ததில் பத்மினி மயக்கம் போட்டு விழுந்திருக்கிறார் என களஞ்சியத்தை காப்பாற்றும்விதமாக பேசியிருக்கிறார் சங்கத்தலைவர் விக்ரமன். 
 
என்னுடைய மகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே அவள் கோடை மழை படப்பிடிப்பில் கலந்து கொள்வாள் என இன்னமும் அனுசரணையாக பேசுகிறார் பிரியங்காவின் தந்தை. 
 
யதார்த்தமாக காட்சி வர வேண்டும் என்று நடிகைகளின் மீது வன்முறை செலுத்துகிறவர்களை, விஷம் குடிக்கும் காட்சியில் தத்ரூபமாக நடிக்க வைக்க வேண்டும். அப்போதுதான் இவர்களுக்கு யதார்த்தத்தின் உண்மையான முகம் தெரியவரும்.