வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 26 மார்ச் 2014 (11:30 IST)

கோச்சடையானை ஐநா பாராட்ட வேண்டும்

கோச்சடையான் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் அவதார், டின்டின் படங்களுக்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ட்ரெய்லர் வெளியான பின் அவதாருக்கும் கோச்சடையானுக்கும் உள்ள அறுநூறு வித்தியாசங்கள் சராசரி பார்வையாளனுக்கு தெரிய வந்தன. அவர்களில் பலர் கோச்சடையானை பொம்மை படம் என்று இணையத்தில் எழுதியும் பேசியும் வருகின்றனர்.

மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் என்றால் நடிகர்களின் அசைவுகளை கேமராவில் படம் பிடித்து அதனை நாம் வரைந்து வைத்திருக்கும் இமேஜில் சூப்பர் இம்போஸ் செய்வது என்று எளிமையாகச் சொல்லலாம். நடிகர்களின் அசைவுகளை படம் பிடிப்பது என்பது மோஷன் கேப்சரின் அடிப்படை.
 
கோச்சடையானில் ரஜினி சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகள், ருத்ரதாண்டவம் ஆடும் காட்சி ஆகியவற்றில் ரஜினி நடிக்கவில்லை. அவருக்குப் பதில் பாடி டபுளும் பயன்படுத்தவில்லை. முழுக்க அந்த காட்சிகளை ஸீஜி யில் உருவாக்கியுள்ளனர். எனில், கோச்சடையான் முழுக்க மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் தயாரான படம் என்பது சரியா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
 

இந்நிலையில் சென்னை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.
 
கோச்சடையான் டிரைலர் காட்சிகளை 3டி பரிமாணத்துடன் புதிய தொழில் நுட்பத்துடன் பார்க்கும்போது அற்புதமாக இருந்தது. ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உற்சாகப்படுத்தியது. டிரையிலரை ரசித்து மகிழ்ந்த ரசிகர்கள் மெயின் படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
 
டிரைலர் வெளியீடு அன்று தியேட்டரில் படம் பார்த்த ரசிகர்களை விட வெளியே சூப்பர் ஸ்டாரை பார்க்க நின்ற ரசிகர்கள் கூட்டம் பலமடங்கு. ரசிகர்களை பார்த்த சூப்பர்ஸ்டார் படத்தின் வெற்றி விழாவை ரசிகர்கள் முன்னிலையில் நடத்துவேன் என்று கூறினார்.
 
முத்து படம் வெற்றி மூலம் ஜப்பான் பாராளுமன்றத்தில் நமது பிரதமர் மன்மோகன் சிங்கை முன்னாள் ஜப்பான் பிரதமர் பாராட்டியது போல் ஐ.நா.சபையில் கோச்சடையான் படத்தை உலக தலைவர்கள் பாராட்ட வேண்டும். அதுதான் எங்கள் லட்சியம்.
 
கோச்சடையான் படம் தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு வைரக்கல்லாகவும் அதே வகையில் தமிழ் மண்ணின் பெருமையை சேர்க்கும் வகையில் அமையும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமில்லை.
 
கோச்சடையான் கார்ட்டூன் பொம்மை படம் என சில விஷமிகள் வதந்திகள் பரப்புவது கண்டிக்கத்தக்கது.
 
- இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.