1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அ‌றிவோ‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 12 ஜனவரி 2016 (13:56 IST)

ஏழைகள் வலிமைபெற இளைய சமுதாயத்தைத் தூண்டிய விவேகானந்தர்

ஏழைகளிடமும் ஒடுக்கப் பட்ட மக்களிடமும் கருணை பொங்க, இளைய சமுதாயம் உற்சாகத் தீ கொழுந்து விட்டெரிய பாடுபட வேண்டும் என்று கூறிய விவேகானந்தரின் பிறந்தநாள் ஜனவரி 12.


 

 
விவேகானந்தர் என்று அழைக்கப்படும்  நரேந்திர நாத் தத்தா 1863 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி கொல்கத்தாவில் விசுவநாத் தத்தா-புவனேஸ்வரி தேவி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.
 
இவர் சிறு வயதில் இருந்தே நினைவாற்றல் மிக்கவராகவும், சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார்.
 
1879 ஆம் ஆண்டு தனது பள்ளிப் படிப்பை முடித்த விவேகானந்தர் கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் (Presidency College) சேர்ந்தார்.
 
இதைத் தொடர்ந்து, ஸ்காட்டிஷ் சர்ச்சு கல்லூரியில் (Scottish Church College) தத்துவம் பயின்றார். அப்போது, ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த வாழக்கை அவருக்கு பல்வேறு கேள்வியை எழுப்பியது.
 
இதற்கான விடை தேடி. இந்த நிலைமையை எவ்வாறு மாற்றுவது என்ற எண்ணமும் அவருக்குள் மேலோங்கின.
 
இந்நிலையில், விவேகானந்தர் இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார். 1881 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணரை சந்தித்தார். இதைத் தொடர்ந்து அவரது தீவிர சீடரானார்.
 
1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் உயிரிழந்தார். அதன் பின்னர் விவேகானந்தர் இந்தியா முழுவதும் சுற்றித் திரிந்தார்.
 
இதன் மூலம் விவேகானந்தர் இந்திய கலாச்சாரம், பண்பாடு, மக்களின் நிலை முதலியவற்றை நேரடியாகக் கண்டறிந்தார். அது ஆங்கிலேயரிடம் இந்தியா அடிமைப்படிருந்த காலம்.
 
ஆங்கிலேயர்களிடம் அடிமை பட்டுக்கிடந்த இந்தியர்களின் துயர் நிலையை கல்வியால்தான் மாற்ற முடியும் என்று நம்பினார் விவேகானந்தர். குறிப்பாக பெண்கள் கல்வி கற்றால்தான் நாட்டின் நிலை மாறும் என்று எண்ணி அதற்காக ஏராளமாக பணிகளை மேற்கொண்டார்.
 
இந்நிலையில், கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்திருந்த ஒரு பாறை மீது அமர்ந்து தியான நிலையில், மக்களின் நிலைமை குறித்து 3 நாட்கள் சிந்தித்தார்.
 
விவேகானந்தர் அமர்ந்து சென்ற அந்த பாறை விவேகானந்தர் பாறை என்று அழைக்கப்படுகின்றது. அந்த பாறையை இன்றும் ஏராளமானவர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
 
நாட்டு விடுதலைக்காகவும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் ஆன்மீக நெறிகள் கூறிய சில நல்ல அம்சங்களை பயன் படுத்தி இளைஞர்களின் உள்ளங்களை உறுதிபடுத்தினார்
 
இதற்காக நாடு முழுவதும் ஏராளமான இடங்களில் உரையாற்றினார். திருமணம் செய்துகொள்ளாமல் நாட்டு மக்களின் நலனை கருதி போதனைகளை செய்து வந்தார். குறைகளை மட்டுமே முன்னிறுத்திப் பேசக் கூடாது மாறாக உற்சாப்படுத்த வேண்டும் என்று போதித்தார்.
 
இவ்வாறு உறுதிபெறும் இளைய சமுதாயம், ஏழைகளிடமும் ஒடுக்கப் பட்ட மக்களிடமும் கருணை பொங்க, உற்சாகத் தீ கொழுந்து விட்டெரிய, குறைவற்ற பக்தியெனும் கவசமணிந்து, சிங்கத்தின் தைரியம் நரம்புகளில் துடிக்க, நூறாயிரம் ஆண்களும் பெண்களும் முன்வருவார்கள். என்று கூறினார்.
 
விவேகானந்தர் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். அதன்படி, 1893 ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற உலகச் சமயங்களின் மாநாட்டுக் கூட்டத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்ற சொற்பொழிவாகக் கருதப்படுகின்றது.
 
லண்டனில் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வந்த மார்க்கரெட் எலிசபெத் விவேகானந்தரின் கருத்துகளால் கவரப்பட்டார். அவருக்கு சகோதரி நிவேதிதா என்று பெயர் வைத்த விவேகானந்தர் அவரை இந்தியப் பெண்களுக்குக் கல்வி புகட்டும் பணியில் ஈடுபடுத்தினார். நிவேதிதா விவேகானந்தரின் சிறந்த சீடர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 
 
"செயல் புரிவதே நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உயர்ந்த லட்சியங்களையும், சிந்தனைகளையும் உள்ளத்தில் நிரப்பு, அதை நாள்தோறும் இரவிலும் பகலிலும் உன் முன் நிறுத்து, அதிலிருந்து நல் செயல்கள் விளையும்" என்று கூறிய விவேகானந்தர். 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி, தனது 39 ஆவது வயதில் காலமானார்.
 
இளைஞர்களின் உள்ளங்ளை தட்டி எழுப்பி உற்சாகமூட்டிய விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12 ஆம் நாள் (இன்று) தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.