செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அ‌றிவோ‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 22 செப்டம்பர் 2016 (17:17 IST)

தேசிய நெடுஞ்சாலைகள்.... நாம் அறியாதவை

காஷ்மீரிலிருந்து கன்னியமாகுமரி வரை சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தில் நெடுஞ்சாலைகளின் பங்கு மிக இன்றியமையாததாக இருந்து வருகிறது. 

 
1. நெடுஞ்சாலைகள், விரைவு சாலைகள், மாவட்ட சாலைகள் மற்றும் ஊரக சாலைகளை சேர்த்து சுமார் 33 லட்சம் கிமீ தூரத்திற்கான கட்டமைப்பை இந்திய தேசம் பெற்றிருக்கிறது.
 
2. இந்தியாவில், 200க்கும் மேற்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இதன் ஒட்டுமொத்த நீளம் 92,851 கிமீ. அதேபோன்று, 1,31,899 கிமீ தூரத்திற்கான மாநில நெடுஞ்சாலை கட்டமைப்பை பெற்றிருக்கிறது.
 
3. இந்தியாவின் பெரும்பாலான நெடுஞ்சாலைகள் இருவழித்தடங்களுடன் அமைந்துள்ளது. இதில், 22,900 கிமீ தூரத்திற்கு 4 வழித்தடம் மற்றும் 6 வழித்தடம் அமைந்துள்ளன.
 
4. ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் சாலை கட்டமைப்பில் வெறும் 1.7 சதவீத அளவுக்குத்தான் நெடுஞ்சாலை கட்டமைப்பு இருக்கிறது. ஆனால், நாட்டின் மொத்த போக்குவரத்தில் 40 சதவீதம் இந்த நெடுஞ்சாலைகள் மூலமாக நடக்கிறது. 
 
5. எர்ணாகுளத்திலிருந்து கொச்சி துறைமுகத்தை இணைக்கும் நெடுஞ்சாலை தான் மிகச் சிறிய நெடுஞ்சாலையாகும். இது வெறும் 6 கிமீ நீளம் மட்டுமே கொண்டது.
 
6. வாரணாசி நகரிலிருந்து கன்னியாகுமரியை இணைக்கம் NH-7 என்ற எண்ணில் குறிப்பிடப்படும் நெடுஞ்சாலைதான் இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலை. இது 2,369 கிமீ நீளம் கொண்டது.
 
7. தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் வடக்கு - தெற்கு மற்றும் கிழக்கு - மேற்கு நெடுஞ்சாலை கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 7,300 கிமீ தூரத்திற்கான நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி, 6,375 கிமீ தூரத்திற்கான சாலை கட்டமைப்புப் பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. 
 
8. இந்த தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ்தான் தங்க நாற்கர சாலை திட்டமும், டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நான்கு பெரு நகரங்களின் மெட்ரோ ரயில் திட்டமும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தங்க நாற்கர சாலை திட்டம் 5,846 கிமீ தூரத்திற்கான கட்டமைப்பை கொண்டுள்ளது.
 
9. நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் மைல்கல்களின் வண்ணத்தை வைத்தே அது தேசிய நெடுஞ்சாலையா, மாநில நெடுஞ்சாலையா என்பதை கண்டறிந்துவிட முடியும்.
 
10. தேசிய நெடுஞ்சாலைகள் மஞ்சள் மற்றும் வெள்ளை வண்ணம் கொண்டிருக்கும்.
 
11. மாநில நெடுஞ்சாலைகள் பச்சை மற்றும் வெள்ளை வண்ணம் கொண்டிருக்கும்.
 
12. நகரச் சாலைகள் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணத்தில் இருக்கும். 
 
13. பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் சாலைகள் ஆரஞ்ச் மற்றும் வெள்ளை வண்ணத்தை கொண்டிருக்கும்.
 
14. கடந்த 2010ம் ஆண்டு நெடுஞ்சாலை பெயர்களை முறைப்படுத்தும் விதமாக புதிய குறியீட்டு எண்கள் கொடுக்கப்பட்டன. அதன்படி, நாட்டின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்லும் நெடுஞ்சாலைகள் இரட்டை இலக்க வரிசையிலும், கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய சாலைகளுக்கு ஒற்றை இலக்க எண்களும் கொடுக்கப்பட்டன. 
 
15. மூன்று இலக்க எண்களை கொண்ட நெடுஞ்சாலைகள் பெரும்பாலும் தேசிய நெடுஞ்சாலைகளின் கிளை சாலைகளாக இருக்கும்.