வெள்ளி, 29 மார்ச் 2024
  1. இதர வாசிப்பு
  2. »
  3. இலக்கியம்
  4. »
  5. கதைகள்
Written By Webdunia
Last Modified: வியாழன், 9 ஜனவரி 2014 (16:50 IST)

செந்தில் அண்ணனின் காதல்

சிறுகதை- சந்திர.பிரவீண் குமார்

‘செந்தில் அண்ணனைத் தெரியுமா?’ என்றுக் கேட்டு உங்களை நான் வெறுப்படையச் செய்யப்போவதில்லை. அவர் எங்கள் ஊரைச் சேர்ந்தவர் என்ற தகவலும், பின்னால் வரும் அறிமுகமும் போதும்.

பள்ளி நாட்களில் சில இலக்கிய நண்பர்களும் எனக்கு இருந்ததால் அவர்களுடன் ஒரு பேச்சுப் போட்டியைப் பார்க்கச் சென்ற போதுதான் எனக்கு செந்தில் அண்ணனின் அறிமுகம் கிடைத்தது. எப்போதும் கலகலப்பாக இருக்கும் செந்தில் அண்ணன் மற்றவர்களை கவர்ந்ததில் ஆச்சரியம் இல்லை.

இலக்கிய நண்பர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் முன்னால் பட்டிமன்றம் போடுவார்கள். அந்த இடத்திற்கு மிக அருகிலேயே செந்தில் அண்ணனின் வீடும் இருந்ததால் எங்களுக்கு அவரது சேவை தேவையாக இருந்தது. பட்டிமன்றத்தில் ஏதாவது ஒரு பக்கம் பேச ஒரு ஆள் உறுதி.

நான் அதிகம் பேசியதில்லை என்றாலும் பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு போய் விடுவேன். செந்தில் அண்ணனின் கலகலப்பானப் பேச்சும், நட்புறவும் எங்கள் இருவரையும் நெருக்கமானவர்களாக்கியது. கூடிய விரைவில் நாங்கள் நண்பர்களாகி விட்டோம்.

செந்தில் அண்ணன் அப்போது பாலிடெக்னிக் கல்லூரி மாணவர். நான் மேல்நிலை வகுப்பு மாணவன். வாலிப வயதும் எங்கள் நட்புறவுக்கு ஒரு காரணம். செந்தில் அண்ணன் எல்லோரையும் கலாய்ப்பார். நாங்கள் அதை ரசித்தாலும் அதனால் சில சமயம் ஆபத்தும் வந்துவிடும்.

ஒரு சமயத்தில் இயக்க நண்பர் ஒருவரிடம் செந்தில் அண்ணனை அறிமுகம் செய்து வைக்கப் போனேன். செந்தில் அண்ணன் வழக்கம் போல கலாய்க்க ஆரம்பித்தார்.

‘‘என்னங்க… உங்க தலைவரை அந்த நடிகர் திட்டிட்டாராமே?’’ என்று கேட்டார்.

முதன்முறையாக அவரைப் பார்த்த இயக்க நண்பருக்கு வந்ததே கோபம்? செந்தில் அண்ணனை திட்டிவிட்டு, என்னிடமும் ‘அந்தாளுடன் சேராதே’ என்று சொல்லிவிட்டுப் போனார். ஆனாலும் அவரது வெகுளித்தனத்தால் இருவரும் நண்பர்களாகவே நீடித்தோம்.

அவரது வீட்டிற்கு அடிக்கடிச் செல்லும் நண்பர்களில் ஒருவனாகி விட்டேன். அவரது அப்பா, அம்மா, தம்பி அனைவரும் எனக்கு நெருக்கமாகி விட்டார்கள்.

அவருக்கு படித்து முடித்து வேலை கிடைத்தப்போது நான் கல்லூரிக்கு நுழைந்து விட்டிருந்தேன். செந்தில் அண்ணன் படித்த பொறியியல் படிப்புக்கு உள்ளூரில் வேலை இல்லாததால் சென்னைக்குப் போனார். நல்ல வேலையும் கிடைத்தது.

என்ன ஆனாலும் சனிக்கிழமை இரவு திருவண்ணாமலை வந்துவிடுவார். அவர் வரும் சமயத்தில் நண்பர்கள் அனைவரும் அவரது வீட்டில் ஆஜராகி விடுவோம். ஒரு காபி குடித்துவிட்டு அனைவரும் கோவிலுக்கு கிளம்பி விடுவோம்.

எங்கள் சந்திப்பில் சென்னை பற்றிய அனுபவங்களை அள்ளி வீசுவார் செந்தில் அண்ணன். ‘சென்னையில அதைப் பார்த்தேன்’, ‘இவரை சந்தித்தேன்’ என்று தற்பெருமை பேசுவார். அதையாவது மன்னிக்கலாம். தேரடி வீதியில் மெட்ராஸ் டீ கடை என்று ஒன்று இருக்கும். நண்பர்கள் அனைவரும் தேநீர் அருந்த செல்வோம். அங்கேயும், ‘‘மெட்ராசில் டீ மூன்று ரூபா, மெட்ராஸ் டீ கடையில ஒன்றரை ரூபா’’ என்று அங்கேயும் தன் அனுபவத்தை ஆரம்பித்துவிடுவார். அதையும் சிலர் ரசித்ததுதான் கொடுமை. நான் சென்னையில் ஐந்து வருடம் இருந்தவன் என்பதையும், அடிக்கடி சென்னைக்குச் சென்று ஊர் சுற்றுபவன் என்பதையும் அங்கே சொல்ல மாட்டேன். சிரித்துக்கொண்டு வந்துவிடுவேன்.

தனக்கு வேலை நிரந்தரம் ஆனதையும் செந்தில் அண்ணன் சொன்னார். இதுவரை எல்லாம் சுபமே. அதற்குப் பிறகுதான் கதையே. வாராவாரம் கோவிலுக்கு வரும்போது செந்தில் அண்ணன் ஒரு பெண்ணைப் பார்த்து மனதைப் பறிக்கொடுத்தார். அந்த பெண் அவரது ஜாதியை சேர்ந்தவரா என்பதை (கல்யாணத்துக்கு ரெண்டு வீட்டுலயும் ஒத்துக்கணும்ல!) உறுதிப்படுத்திக் கொண்டு அவளை ஒருதலையாக காதலிக்க ஆரம்பித்தார். அதுவரை பொழுது போவதற்கு மட்டும் கோவில் வந்தவர், அந்தப் பெண்ணைப் பார்த்தப் பிறகு தொடர்ந்து கோவில் வர ஆரம்பித்தார்.

அந்த பெண் இவரை ஏறெடுத்துப் பார்த்ததாகத் தெரியவில்லை. ஆனால் இவரும் விடுவதாக இல்லை. அவள் பெயர் ‘சங்கீதா’ என்ற தகவலும் எங்களுக்குக் கிடைத்தது. அப்போதைக்கு அந்த தகவல் போதுமே?

ஒருநாள் அவரது நண்பன் வேலு அந்த பெண்ணை உள்ளூர் கச்சேரி ஒன்றில் பார்த்ததாகக் கூறினார். சங்கீதாவுக்கு சங்கீத ரசனை உண்டு என்பதைக் கண்டு கொண்டோம். செந்தில் அண்ணன் ஊரில் இல்லாவிட்டாலும் ஊரில் ஏதாவது கச்சேரியில் சங்கீதா இருக்கிறாளா? என்பதை உளவுப் பார்த்தார்கள்.

அவளைப் பற்றி நாங்கள் அறிந்த செய்திகளை வார இறுதி நாட்களில் செந்தில் அண்ணனிடம் சொல்லி விடுவோம். இப்போது அடுத்தக் கட்டத்தை நோக்கி காதல் சென்றாக வேண்டும் என்ற பிரச்சினை வந்து சேர்ந்தது.

எனது நெருங்கிய நண்பனும், வகுப்புத் தோழனுமாகிய கார்த்திக்கை ஒருநாள் கோவிலில் அறிமுகம் செய்து வைத்தேன். சங்கீதாவின் தங்கை மைதிலியை கார்த்திக் சில வருடங்களாகவே காதலிக்கிறான் என்ற உருப்படியான செய்தி வந்தது. அதற்குள் கார்த்திக் செந்திலுடன் நெருங்கி விட்டான். இருவரும் சகலைகளாம். அக்காளுக்கு திருமணம் நடந்துவிட்டால் தங்கை தன்னை காதலிப்பாள் என்று கார்த்திக் நம்பினான்.
வாரந்தோறும் கார்த்திக்கும், செந்தில் அண்ணனும் சந்திக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் இருவரும் சந்திப்பது எனக்குக்கூடத் தெரியாது. எனக்கு காதில் புகை வந்தது. தனிப்பட்ட வேலைகளின் காரணமாக என்னாலும் அடிக்கடி கோவிலுக்குப் போக முடியவில்லை. அப்படியும் சில நாட்கள் அங்கே போனால் செந்தில், வேலுவுடன் கார்த்திக்கும் உட்கார்ந்திருப்பான். சகலைகள் ‘டிஸ்கஸ்’ செய்கிறோம் என்றான் கார்த்தி. என்னை துரத்தப் பார்ப்பான்.

அப்போது, அவன் செந்தில் அண்ணனின் நண்பர்கள் கூப்பிடும் பெயரிலேயே அவனும் கூப்பிட்டுக் கொண்டிருந்தது தெரிந்தது. அவனிடம், ‘‘என்னடா மரியாதை இல்லாம அவரை இப்படி பேர் சொல்லிக் கூப்பிடுறே?’’ என்றேன். அவன் சிரித்துக்கொண்டே, ‘‘சும்மாதான் மச்சி…. என்ன இருந்தாலும் சகலைகளாக ஆகப் போறவங்கல்ல?’’ என்று கண்ணடித்தான். எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது.

இதுவரை எல்லாம் சரி… அந்த பெண்ணிடம் இப்போது செந்தில் அண்ணன் காதலைச் சொல்லிட வேண்டும் என்று துடித்தார். நல்ல சமயம் பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் அவளை வேலுவுடன் சந்திக்கப் போவதாகக் கூறினார். நாங்களும் அவரது எதிர்காலம்(!) பற்றிய கனவுகளோடு காத்திருந்தோம்.

அடுத்த வாரம்தான் செந்தில் அண்ணனை பார்க்க முடிந்தது. அதற்குள் சங்கீதா அவரை ஒத்துக்கொள்ளவில்லை என்ற தகவல் மட்டும் எனக்கு கிடைத்தது.

செந்தில் அண்ணனையும், வேலுவையும் கோவில் கொடி மரத்துக்கு முன்னால் சந்தித்தேன்.

மெதுவாக, ‘‘என்னாச்சு சங்கீதா…?’’ என்றேன்.

செந்தில் அண்ணன், ‘‘போடா வெண்ணெய்ன்னு சொல்லிட்டா’’ என்றார் வழக்கமான நக்கலுடன்.

‘‘நாங்க ரெண்டு பேரும் அவளை நேரம் கேட்டு போய் பேசினோமா?. இவன் தன்னோட லவ்வ சொன்னான். அந்த பொண்ணு ஐயம் ஆல்ரெடி ஃபிக்ஸடுங்கன்னு சாதாரணமா சொல்லிட்டா. அவ வேற யாரையோ லவ் பண்றாளாம்’’ என்றார் வேலு.

‘‘விடுப்பா… நமக்கு இன்னும் சூப்பர் பொண்ணு கிடைப்பா’’ என்றார் செந்தில் அண்ணன் புன்னகையுடன்.

எனக்கு இப்போது என் நண்பன் கார்த்தியை நினைத்து சிரிப்பு வந்தது. ‘‘இனிமேல் அவன் யாரை சகலைன்னு கூப்பிடுவான்?’’