வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. நட்சத்திர பேட்டி
Written By John
Last Updated : புதன், 16 ஏப்ரல் 2014 (11:22 IST)

சினிமா குறித்து எஸ்.ராமகிருஷ்ணனுடன் ஓர் உரையாடல்

சிறுகதை, நாவல், நாடகம், திரைப்படம் என கதை புழங்கும் அனைத்து கலை வடிவங்களிலும் தனது ஆளுமையை செலுத்தியவர் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். சிறந்த சினிமா ரசிகர்; சீரிய விமர்சகர். சினிமா எனும் கலை வடிவை தியரிட்டிகலாக அறிந்து வைத்திருக்கும் தமிழின் குறைவான ஆளுமைகளில் முக்கியமானவர். சினிமா குறித்தும், அதில் அவரது பங்களிப்பு குறித்துமான உரையாடலிலிருந்து.
பால்யத்தில் சினிமாவின் மீதான விருப்பம் எப்படி ஏற்பட்டது?
 
எல்லா கிராமத்து சிறுவர்களையும் மாதிரி, துண்டு பிலிம்களை சேகரிப்பது, டூரிங் தியேட்டரில் மண்ணை குவித்து படம் பார்ப்பது என்றுதான் என்னோட சினிமா மீதான விருப்பமும் தொடங்கியது. சினிமா பார்ப்பதைவிட, அதைப் பார்க்க பயணம் செய்வது தனியான அனுபவம். வகுப்புக்குப் போகாமல் சினிமா பார்க்க போனதற்காக பலமுறை பிடிக்கப்பட்டிருக்கிறேன். ஒருவார காலம் பள்ளியில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட அனுபவமும் உண்டு.
 
சின்ன வயசில் என்னோட உலகம் காமிக்ஸ் புத்தகங்களால் நிரம்பியிருந்தது. அதனால், 'ரிவால்வர் ரீட்டா', 'வல்லவன் ஒருவன்' மாதிரியான படங்கள்தான் எனக்கு விருப்பமாக இருந்தது. கல்லூரி நாட்களில்தான் படங்களை தேர்வு செய்து பார்க்கணும் என்கிற விவரம் தெரிய வந்தது. அதுவரை எல்லா சினிமாவும் ஒன்றுதான், அத்தனையும் ஏதோ விதமான மாயம் என்றே நம்பினேன்.
 
தொழில்ரீதியாக தமிழ் சினிமா ஆட்களுடன் எப்படி தொடர்பு ஏற்பட்டது?
 
தற்செயலாதான் அந்த தொடர்பு ஏற்பட்டது. நான் ஊர் சுற்றுவதற்காகவும், எழுத்தாளராவதற்காகவும் அலைந்து கொண்டிருந்தேன். என்னோட கதைகள் சிறுபத்திரிகைகளில் வெளியாகி பரவலா கவனம் பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் சென்னை வந்தேன். இங்கு தங்குவதற்கு அறையில்லாமல் தாம்பரம் தொடங்கி பாரீஸ் வரை இருபத்தஞ்சுக்கும் மேலாக நண்பர்களோட அறைகளில் தங்கியிருந்திருக்கிறேன்.
 
இவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் சினிமாவை சேர்ந்தவங்க. இந்த நண்பர்கள் தங்களோட தேனீரை என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள். எனக்காக புத்தகங்கள் வாங்கித் தந்தார்கள். திரைப்பட சங்கங்களுக்கு அழைத்துச் சென்று படம் பார்க்கச் செய்தார்கள். இவர்களில் பலர் இப்போது முக்கியமான இயக்குனர்கள். சிலர் இன்னும் துணை இயக்குனர்களாகவே இருக்காங்க.
 
இந்த நட்புதான் என்னை எழுத்தாளராக்கியது. அதன் தொடர்ச்சியாகவே நான் சினிமாவில் நுழைவது சாத்தியமானது. அத்தோடு பாலசந்தர் அவர்களின் மகன் கைலாசத்துடன் ஏற்பட்ட நட்பு காரணமா பூனா திரைப்பட கல்லூரியில் படித்த சிலருடன் நட்பு உருவானது. அப்படித்தான் சினிமாவுக்குள் பிரவேசித்தேன்.
 
இலக்கியவாதிகள் கமர்ஷியல் சினிமாவிற்கு தகுதியானவர்கள் இல்லை என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா?
 
கமர்ஷியல் சினிமாவை ஏதோ அருவருப்பான விஷயமா ஒதுக்க வேண்டியதில்லை. அந்தப் படங்களுக்கு நானும் ரசிகனாயிருந்திருக்கேன். என் வரையில் இரண்டே வகையான திரைப்படங்கள்தான் இருக்கின்றன. ஒன்று, பொழுதுபோக்கு திரைப்படங்கள் மற்றது கலைப்படங்கள். பொழுதுபோக்கு திரைப்படம் அதிகமும் பார்வையாளர்களோட விருப்பு வெறுப்பை முதன்மைப்படுத்தி உருவாக்கப்படுது. கலைப்படங்களுக்கு அந்த கட்டுப்பாடு இல்லை. கலைப்படங்கள் எப்போதுமே வாழ்வை ஆவணப்படுத்துற அரிய கலை முயற்சியில் ஈடுபடுகின்றன. தமிழில் அந்தமாதிரியான முயற்சிகள் குறைவு.
 
சினிமாவில் தீவிர எழுத்தாளர்கள் பணியாற்றுவது உலகம் முழுவதும் தொடர்ந்து நடந்து வர்ற ஒரு செயல்தான். இலக்கிய ஆசான்களாக நாம கொண்டாடுற வில்லியம் பாக்னர், காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ், கார்லோஸ் புயண்டஸ், ஹெமிங்வே, வைக்கம் முகமது பஷீர், சதத் ஹசன் மண்டோ, யுகியோ மிஷிமா னு பலர் அவங்க மொழியின் ஜனரஞ்சகமான படங்களில் பணிபுரிந்தவர்கள்தான். போர்ஹே மாதிரியான பின் நவீனத்துவத்தின் பிதாமகர் கூட சாகசப் படங்களில் பணியாற்றியிருக்கிறார்.
 

பொழுதுபோக்கு சினிமாவில் ஒரு இலக்கியவாதி என்ன செய்துவிட முடியும் என்று நினைக்கிறீர்கள்?
 
ஆபாசமில்லாத, வக்கிரங்களை தூண்டாத, தரமான பொழுதுபோக்கினை தர உதவ முடியும். இன்னும் ஒரு படிமேலே போய் வாழ்க்கை யதார்த்தங்களை திரையில் பிரதிபலிக்க செய்ய முடியும்.
 
இன்றைய தமிழ் சினிமாவில் இதற்கான சந்தர்ப்பம் இருப்பதாக நினைக்கிறீர்களா?
 
சந்தர்ப்பம்ங்கிறது தானா உருவாகிறதில்லை. மாறாக நம்மால் அதை ஏற்படுத்திக்க முடியும். கமர்ஷியல் சினிமா வெகுமக்களோட கலை வடிவமாக இருப்பதால அதை புறக்கணிப்பது ஒரு வகையில் வெகுமக்களை புரிந்து கொள்ளாமல் புறக்கணிப்பது மாதிரிதான். இதை புரிஞ்சுகிட்டு செயல்பட்டால் கமர்ஷியல் சினிமா வழியாக மாற்றங்களை உருவாக்க முடியும்னுதான் தோணுது. அந்த வகையில் நான் எம்.டி. வாசுதேவன் நாயரையும், ராஜேந்தர்சிங் பேதியையும், பத்மராஜனையுமே எனது முன்னோடிகளாக கருதுகிறேன்.
உங்கள் படைப்புகளில் உரையாடல்கள் குறைவு. தமிழ் சினிமாவோ அதிகம் உரையாடல் சார்ந்த வடிவம். இந்த முரணை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
 
 
என்னோட கதைகளில் உரையாடல் குறைவுங்கிறது உண்மைதான். ஆனால் நான் பத்து நாடகங்கள் எழுதியிருக்கிறேன். அந்த நாடகங்கள் முழுமையா உரையாடல்கள் மட்டும்தானே. புனை கதையில் உரையாடலின் தேவை குறைவு என்று நான் நினைக்கிறேன். சூழலின் வழியே கதை மாந்தர்களின் மனவோட்டத்தை வெளிப்படுத்த முடியும்னு நான் கருதுவதுதான் இதற்கு காரணம். தவிர இன்றைய சினிமா அதிகமான உரையாடல் சார்ந்தது இல்லை. எந்த இயக்குனரும் பக்கம் பக்கமா வசனம் எழுதித்தர சொல்வதில்லை. சினிமாவில் என்னோட வேலை வசனகர்த்தாவா இருந்தாலும் நான் வசனங்களை மட்டுமே எழுதுறதில்லை. காட்சியை அதன் பின்புலத்தோடு முழுமையா எழுதறேன். அதனூடாகதான் வசனங்கள் இடம்பெறுது. அந்தவகையில் இயக்குனர் காட்சியின் பின்புலத்தை புரிந்துகொள்ள என் திரை எழுத்து உதவியா இருக்கு.
 
இலக்கியவாதிகள் சினிமாவிற்கு வந்தவுடன் தங்கள் தனித்துவத்தை இழந்துவிடுகிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே. அதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?
 
 
இலக்கியவாதிகள் அரசு அலுவலகத்தில் வேலை செய்யலாம், பெட்டிக்கடை வச்சிருக்கலாம், புரோக்கர் தொழில் செய்யலாம், வட்டிக்கு விடலாம், வங்கியில் பணியாற்றலாம். அப்போதெல்லாம் அவங்க தனித்துவம் இழக்கிறதில்லை. சினிமாவுக்கு வந்தவுடன் மட்டும் தங்களோட தனித்துவத்தை இழந்துடறாங்கனு சொல்றீங்களா? இலக்கியவாதிகளை சுற்றி இப்படி பூசப்படும் புனிதங்களை நான் ஒருபோதும் அனுமதிப்பதில்லை.
 

வசனத்தில் நீங்கள் எதில் அதிக கவனம் செலுத்துகிறீர்கள்?
 
 
கதை என்ன விதமான உரையாடலை கோருகிறது என்பதை பொறுத்தே என்னோட உரையாடல் பாணி அமையுது. வசனங்கள் இயல்பா இருக்கணும். வசனம்ங்கிறது கதாபாத்திரங்களின் உணர்ச்சி நிலையை வெளிப்படுத்துற விஷயம். வாழ்க்கையில் நாம் வீர வசனம் பேசுறதில்லை. ஆனால் உணர்ச்சிவசப்பட்ட நிமிஷங்களில் கடகடனு பொரிஞ்சு தள்ளிடறோம் இல்லையா? அப்படித்தான் திரையிலும் இருக்கணும் என்று விரும்புகிறேன். கதபாத்திரங்கள் தாங்களே பேசிக்கிற மாதிரி எழுதப்பட வேண்டும். தேவைப்படுற இடங்களில் கொஞ்சம் கவித்துவமா இருந்தால் நல்லா இருக்கும்னு மட்டும் யோசிப்பேன். இப்படி எழுதுறது இப்போது சாத்தியம்னே தோணுது.
 
ஒரு எழுத்தாளராகயிருப்பது சினிமாவில் எந்த அளவு உதவுகிறது?
 
கதாபாத்திரங்களின் இயல்பை புரிந்துகொள்ளவதற்கும், அவர்கள் செயல்கள் எப்படி அமையும் என்று வெளிப்படுத்துவதிலும் ஒரு எழுத்தாளராக இருப்பது பயனுள்ளதாக இருக்கு. சினிமா அதிகம் காட்சி சார்ந்த கலை. கதாபாத்திரங்கள் எப்படி காட்சிப் பூர்வமா தங்களை வெளிப்படுத்திக் கொள்வார்கள் என்று எழுத, சிறிய பயிற்சியும் வளமான கற்பனையும் தேவை. என்னோட கதையுலகம் துல்லியமான காட்சிகளும், கூர்ந்த அவதானிப்பும், தனித்துவமான கற்பனைகளும் நிரம்பியது. அதனால் எனக்கு சினிமாவில் பணிபுரிவது எளிதாகவே இருக்கு.
இலக்கியத்தை சினிமாவாக்கும்போது ஏற்படும் சவால்களாக எதை கருதுகிறீர்கள்?
 
தமிழிலும் சரி இந்திய சினிமாவிலும் சரி, இலக்கியத்தை திரைப்படமாக்குகிற போக்கு ரொம்பவே குறைவு. ஹாலிவுட்டிலும் கூட வணிகரீதியாக வெற்றிபெறும் பொழுதுபோக்கு படங்களைதான் சினிமாவாக்குகிறார்கள். நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் மார்க்வெஸ் தன்னோட 'நூற்றாண்டு கால தனிமை' நாவலை திரைப்படமாக்க யாருக்கும் அனுமதி தரமறுத்திட்டார். அந்த நாவல் படிக்கிற ஒவ்வொருத்தரிடமும் அவங்கவங்க மனதிற்கு ஏற்ப ஒரு காட்சி படிமத்தை உருவாக்கியிருக்கு. திரைப்படமாக்கும்போது அது கலைஞ்சிடக்கூடும்ங்கிறதே மார்க்வெஸின் மறுப்புக்கு காரணம். ஒருவகையில் அது சரியானதுதான்.
 
இன்னொரு பக்கம், நாவலை சினிமாவாக மாற்றும்போது அதை ஒரு இயக்குனர் எவ்வளவு தூரம் உள்வாங்கியிருக்கிறார் என்பதற்கு ஏற்ப அதனோட வெளிப்பாடு இருக்கும். அதற்கு நல்ல உதாரணம் கபோலாவின் 'காட்பாதர்' மற்றும் ஆலன் பார்க்கரின் 'ஆஞ்சலாஸ் ஆசஸ்.' இரண்டிலும் நாவலை காட்டிலும் திரைபடம் மிகமிக அழகா அமைந்திருக்கும்.
 
இது தவிர இன்னொரு வழியும் இருக்கு. இது டேவிட் லீன் உருவாக்கியது. அவர் நாவலின் மையத்தை எடுத்துக்கொண்டு உபநிகழ்வுகளை விட்டு விடுகிறார். டாக்டர் ஷிவாகோ நாவலை வாசித்து பாருங்க. அப்புறம் டேவிட் லீன் படத்தையும் பாருங்க. டேவிட் லீனின் வலிமை அப்போது உங்களுக்கு புரியும்.
 
தமிழ் நாவல்களை திரைப்படமாக்கும் சூழல் அமைந்தால் எந்த நாவலை சிபாரிசு செய்வீர்கள்?
 
ஜானகி ராமனின் 'அம்மா வந்தாள்', அசோகமித்ரனின் 'ஆகாய தாமரை', 'மானசரோவர்', ப. சிங்காரத்தின் 'புயலிலே ஒரு தோணி', ஹெப்ஸிபாவின் 'புத்தம் வீடு', ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்', கரிச்சான் குஞ்சுவின் 'பசித்த மானுடம்', ஆ. மாதவனின் 'கிருஷ்ண பருந்து', ஆதவனின் 'என் பெயர் ராமசேஷன்', ஜி. நாகராஜனின் 'குறத்தி முடுக்கு' இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.
 

தமிழ் திரைப்படங்களுக்கு என்று தனியான திரைக்கதை முறையிருக்கிறதா?
 
 
நிச்சயமாக! நாம் 'சிட்பீல்டு' மாதிரியான ஹாலிவுட் திரைக்கதை அறிஞர்களோட முறையை பின்பற்றி தமிழில் திரைக்கதை உருவாக்க முடியாது. நம் திரைப்படங்கள் வேறு வகைப்பட்டவை. தமிழில் நிறைய கதை முறைகள் இருக்கு. இவை இன்னமும் திரைக்கதை வடிவம் பெறலை. உதாரணமா கதைக்குள் கதை சொல்வது நம் நாட்டுப்புற கதைகளில் சிறப்பா காணப்படுது. அதேமாதிரியான வடிவம் திரைக்கதையில இன்னும் முயற்சி செய்து பார்க்கப்படலை. கதைகளில் தமிழ் கலாசாரம் சார்ந்து சில பிம்பங்கள் உருவாகியிருக்கு.
 
உதாரணமா கீதாங்கிற பெயரை கேட்டதும் நம் மனசுல 25 வயது பெண் உருவம் வந்திடுது. அதுவே சுந்தரவல்லினு சொல்லும்போது ஐம்பது வயசு தோற்றம் ஏற்படுது. இப்படி நம் மனசில் படிந்துபோன பிம்பங்களுக்கு மாற்று தேடவேண்டியது கதையில் முதன்மையா தேவைப்படுது. ஒரு படத்தில் பாண்டியராஜன் கீதானு ஒரு பாட்டியை அறிமுகப்படுத்துவார். தியேட்டர் முழுக்க சிரிப்பு வெடிக்கும். காரணம், அந்த பெயர்களை நாம் நம் மனபிம்பங்களோடு ஒப்பிட்டு பார்க்கிறோம். தமிழ் திரைப்படங்களின் கதாநாயகர்கள் பெயர்களை மட்டும் ஒருத்தர் ஆய்வு செய்தால் சுவாரஸ்யமான பல விஷயங்கள் நமக்கு கிடைக்கும்.
தனித்துவமான திரைக்கதை தமிழில் சாத்தியமாக என்ன செய்யவேண்டும் என நினைக்கிறீர்கள்?
 
 
நல்ல திரைக்கதை எடிட்டர்கள் இங்கு குறைவு. அகிரா குரசோவா தனது ஒவ்வொரு படத்தின் திரைக்கதையையும் முழுமையா எழுதி முடித்தபிறகு ஒரு திரைக்கதை எடிட்டரிடம் அனுப்பி அவர் செய்து தரும் திருத்தங்களை உள்வாங்கி அதற்குப் பிறகே படம் பண்ணியிருக்கிறார். ஹாலிவுட்டில் ஸ்கிரிப்ட் டைரக்டர் என்றே ஒருவர் இருக்கிறார். அவர் திரைக்கதையில் கதாபாத்திரங்களின் முக்கிய உணர்ச்சிகளை சரிபார்க்கிறவர். தமிழில் திரைக்கதையாசிரியர் என்று தனியே யாருமேயில்லை. அது பெரிய குறையாகவே தோணுது.