வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : செவ்வாய், 31 மார்ச் 2015 (09:31 IST)

என்னுடைய திருமணத்தில் அப்பா கலந்து கொள்ளாத வருத்தம் எனக்கு இருக்கிறது - யுவன் பேட்டி

மே 9- ஆம் தேதி நெல்லையில், யுவன் மியூஸிக் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார், யுவன் ஷங்கர் ராஜா. அதனை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. தனது திருமணம், இளையராஜாவுக்கு தனது திருமணத்தில் விருப்பம் இருந்ததா, மாஸ் படத்தில் தமன் இசையமைத்தது எப்படி போன்ற கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
 

 
யுவன் மியூஸிக் எக்ஸ்பிரஸ் முன்பே நடந்திருக்க வேண்டுமே, ஏன் தாமதம்?
 
இந்த இசை நிகழ்ச்சி முதலில் ஒரு தேதியில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், பிரமாண்டமாக நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்பதற்காக தேதியை மாற்றியிருக்கிறேnம். அதுதான் தாதத்துக்கு காரணம்.
 
யாருடைய பாடல்கள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும்? இளையராஜா கலந்து கொள்வாரா?
 
இந்த நிகழ்ச்சியில் என்னுடைய படங்களிலிருந்து பாடல்கள் இடம்பெறும். அப்பா இளையராஜா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி என அனைவரும் வருகிறார்கள். வேறு யார் யார் வருகிறார்கள் என்பதை முறைப்படி அறிவிப்போம்.
 
மாஸ் படத்தில் தமன் இசையமைத்திருப்பதாக வந்த செய்திகள்?
 
அப்படி செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. உண்மையில் நடந்தது என்னவென்றால், யுவன் இசையில் பணிபுரிய ஏதாவது வாய்ப்பு இருந்தால் சொல்லுங்க என்று தமன் வெங்கட்பிரபுவிடம் கேட்டிருக்கிறார். அதை வெங்கட்பிரபு என்னிடம் சொன்ன போது, சந்தர்ப்பம் வரும்போது பார்க்கலாம் என்றேன். மாஸ் படத்தில் நயன்தாரா உடனே தேதிகள் கொடுத்ததால் ஒரு பாடலை உடனே படமாக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் நான் ட்யூன் போட்ட பாடலுக்கு தமன் இசையமைத்தார். அந்தப் பாடலின் மெட்டு என்னுடையது, இசை வடிவம் தமனுடையது.

திருமண வாழ்க்கை எப்படி போகிறது?
 
நல்லபடியாகப் போகிறது. அப்பா சம்மதத்துடன்தான் என்னுடைய திருமணம் நடந்தது. திருமணத்தில் அப்பா கலந்து கொள்வதாகத்தான் இருந்தது. பெண் வீட்டு தரப்பில் உடனே திருமணம பேச்சு நடந்ததால் அப்பாவால் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. திருமணமான மறுநாளே சென்னை வந்தவுடன் அப்பாவை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கினேன். ஆனாலும், அப்பா திருமணத்தில் கலந்து கொள்ளாத வருத்தம் எனக்கு இருக்கிறது.
 

 
இப்போதெல்லாம் நீங்கள் இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதே?
 
ஒரு வருஷத்தில் பதினான்கு படங்களுக்கெல்லாம் இசையமைத்திருக்கிறேன். இப்போது இடம் பொருள் ஏவல், மாஸ், யட்சன், தரமணி, செல்வராகவன் படம் ஆகியவற்றுக்கு இசையமைக்கிறேன். இனிமேல் படங்களை தேர்வு செய்து இசையமைக்கலாம் என்றிருக்கிறேன். விரைவில் இசை நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, அந்த நிறுவனத்தின் மூலம் என்னுடைய இசையை வெளியிடும் எண்ணமிருக்கிறது.