வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Suresh
Last Updated : வியாழன், 25 ஜூன் 2015 (12:49 IST)

யாகாவாராயினும் நாகாக்க நாயகன் ஆதி, நாயகி நிக்கி கல்ராணி பேட்டி

மிருகம், அரவான், ஈரம் படங்கள் நடிகர் ஆதியின் நடிப்புத் திறமைக்கு சான்று. ஆறடி உயரத்தில் அம்சமாகதான் இருக்கிறார். ஆனாலும், ஒரு 'பிரேக்' இதுவரை ஆதிக்கு வாய்க்கவில்லை.


 

 
அதிர்ஷ்ட லட்சுமியின் கடைக்கண் பார்வைக்காக ஆதியின் அண்ணன் சத்யபிரபாஸே, ‘யாகாவாராயினும் நாகாக்க’ என்ற படத்தை ஆதியை வைத்து இயக்கியிருக்கிறார். இது ஆதியை பொறுத்தவரை, துருப்புச் சீட்டு.

நாளை படம் வெளியாகும் நிலையில் ஆதியும், படத்தின் நாயகி நிக்கி கல்ராணியும் கோவை வந்திருந்தனர். அப்போது அவர்கள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
 
ஆதி
 
யாகாவாராயினும் பற்றி சொல்லுங்கள்...?
 
2000–ம் ஆண்டில் இருந்து 2001–ம் ஆண்டு பிறக்க இருந்த புத்தாண்டு தின கொண்டாட்டத்தின் போது சென்னையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. 4 நண்பர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவம்தான் கதை.
 
படத்தின் இயக்குனர் சத்ய பிரபாஸ் பற்றி...?
 
சத்ய பிரபாஸ் எனது அண்ணன். சிறு வயதில் இருந்தே என்னைப் பற்றி அவருக்கு நன்றாக தெரியும். இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் மட்டும் நடித்தேன். எனது தந்தை இப்படத்தை தயாரித்துள்ளார்.
 
ஒருவிதத்தில் இது உங்கள் குடும்பப் படம்...?
 
ஆமாம். எங்களது சொந்த படம் என்பதால் கடுமையாக உழைத்திருக்கிறேன். காமெடி, காதல், ஆக்சன், திரில்லர் கலந்த படமாக உருவாகி உள்ளது.
 
படத்தில் நடித்திருப்பவர்கள் யார்?
 
3 முறை தேசிய விருது பெற்றுள்ள இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, நாசர், கிட்டி, பசுபதி என மூத்த நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரிச்சா பல்லோட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
படத்தில் நீங்களும் ஒரு பாடல் பாடியிருக்கிறீர்களே?
 
மேலும் அடுத்தப்பக்கம் பார்க்க...

ஆம். இந்தப் படத்தில் ஒரு பாடலை நான் பாடி உள்ளேன். எல்லா கதாநாயகர்களும் பாடுகிறார்கள் என்பதற்காக நான் பாடவில்லை. காதலி மீதான ஆதங்கத்தில் பாடும் பாடல் என்பதால் நானே பாடினால் நன்றாக இருக்கும் என்பதால் பாடினேன். 
 
படம் எப்படி வந்திருக்கிறது?
 
எதிர்பார்த்ததைவிட சிறப்பாக வந்திருக்கிறது. நிச்சயம் வெற்றிப் படமாக அமையும்.
 

 


 
நிக்கி கல்ராணி
 
தமிழில் இது உங்களுக்கு இரண்டாவது படம் இல்லையா?
 
வெளிவந்த முதல் படம் டார்லிங்காக இருந்தாலும், நான் நடித்த முதல் படம் இதுதான்.
 
இந்தப் படத்தில் உங்களது கதாபாத்திரம்...?
 
இப்போது அதுபற்றி சொல்ல முடியாது. அதேநேரம் என்னுடைய நிஜ கேரக்டரைப் போலவே இருந்ததால் ஈடுபாட்டோடு நடித்தேன்.
 
சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடிப்பீர்களா?
 
நடிக்க மாட்டேன். இந்தப் படத்தில் ஒரு காட்சியில் நான் டாஸ்மாக் பாருக்கு செல்வது போல இருக்கும். கதைக்கு தேவைப்பட்டதால் மட்டும் அந்தக் காட்சியில் நடித்தேன். நிஜத்தில் நான் எந்த பாருக்கும் செல்ல மாட்டேன்.