செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. நட்சத்திர பேட்டி
Written By john
Last Updated : வியாழன், 3 ஏப்ரல் 2014 (11:43 IST)

ஜேம்ஸ்பாண்ட் படத்துல வர்ற முத்தத்தை எதிர்பார்க்காதீங்க - விஷால்

முதல்முறையாக விஷால் நடித்திருக்கும் ஒரு படத்தை திரையுலகமும், தமிழகமும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது. பாண்டிய நாடு படத்தின் வெற்றியால் எழுந்த எதிர்பார்ப்பு மட்டும் கிடையாது. விஷாலின் தன்னம்பிக்கைக்கு, துணிச்சலுக்கு கிடைத்த மரியாதை இது. இரண்டு தோல்விப் படத்தை தந்த இயக்குனருக்கு மூன்றாவது படத்தை தர துணிச்சல் வேண்டும்.

கோச்சடையான் வெளியானாலும் அறிவித்த ஏப்ரல் 11 படத்தை வெளியிடுவேன் என்று கூற அதீத தன்னம்பிக்கை வேண்டும். இந்த இரண்டும் நான் சிகப்பு மனிதன் படத்தின் சந்தை மதிப்பை சட்டென்று உயர்த்தியது. அந்த உற்சாகத்துடன் படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது. விஷாலின் பேச்சில் திருப்தியும், பதற்றமும் சரிவிகிதம்.
 
மூன்றாவது முறையாக திருவுடன் சேர்ந்திருக்கீங்க. எப்படி ஃபீல் பண்றீங்க?
 
பாடல்கள் வெளியீட்டுக்கு அப்புறம் இந்தப் படத்தோட டீசரும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கு. இந்தப் படம் ஒரு கேள்விக்குறியில தொடங்கிச்சு. பாண்டிய நாடு ரிலீஸுக்கு முன்னாடியே இந்த புராஜெக்ட் டேக் ஆஃப் ஆச்சு. பாண்டிய நாடு ரிலீஸானதுக்கு அப்புறம் எல்லோரும் ஒரேயொரு கேள்வியை கேட்டாங்க. ஏன் திருவை வச்சு படம் பண்றீங்க? வேற காம்பினேஷன் போக வேண்டியதுதானே. என்னைப் பொறுத்தவரை நான் திருவை நம்பினேன், திரு சொன்ன கதையை நம்பினேன். ஏப்ரல் 11 -ம் தேதிதான் அந்த கேள்விக்கான பதில் கிடைக்கும். திரு என்கிற பெயருக்கும் திரு என்கிற இயக்குனருக்கும் இந்தத் திரைப்படத்துக்கு அப்புறம் ஒரு அங்கீகாரம் கிடைக்கும்னு நான் நம்புறேன்.
 

திருவின் இந்தக் கதையில் அப்படி என்ன விசேஷம்? 
 
ஆக்சுவலி இந்த கதையை வேறொருத்தருக்கு சொல்றதுக்காக திரு போனப்போ அவரை பிடிச்சு இந்தக் கதையை கேட்டேன். இந்த அவுட் லைனை சொன்னார். சொல்லி முடிச்ச உடனே உண்மையிலேயே ஒரு க்யூரியாசிட்டி ஏற்பட்டிச்சு. இது ஸ்லீப்பிங் டிசார்டர் உள்ள கதாபாத்திரம். எந்நேரமும் விஷால் தூங்கிட்டிருந்தார்னா எப்படி சண்டை போடுவார், எப்படி அந்த கதாபாத்திரத்தை வச்சு திரைக்கதை அமைக்க முடியும்னு... சூப்பர்ஸ்டார் ரஜினி சார்வரைக்கும் கேட்கும் போது அதுவே பிரமிப்பா இருந்தது. அதுதான் இந்தப் படத்தை கண்டிப்பா பண்ணணும்னு முடிவு எடுக்க வச்சது.
யுடிவி...?
 
நான் கதை கேட்ட அப்புறமா யுடிவி தனஞ்செயன் சார் இந்த புராஜெக்ட்ல இணைஞ்சாங்க. நான் உண்மையிலேயே அதுக்கு பெருமைப்படுறேன். இதே மேடையில் நாங்க சமர் திரைப்படத்துக்கு பேசும் போது வேறொரு மனநிலையில் இருந்தோம். இன்னைக்கு ஒரு சாந்தமான மனநிலையில் இருந்து பேசிகிட்டிருக்கேன்னா... அதுக்கு கண்டிப்பா தனஞ்செயன் சாருக்கும், யுடிவி க்கும் நன்றி சொல்லணும். 
 
 

நடிக்க தொடர்ந்து வாய்ப்பு வரும் போது தயாரிப்பு நிறுவனம் அவசியமா?
 
ஒரு நேர்மையான பயணத்துக்கு ஒரு ஆக்டருக்கும் சரி, ஃபிலிம் மேக்கருக்கும் சரி, கண்டிப்பா ஒரு தயாரிப்பு நிறுவனம் தேவை. அதுக்காகதான் நான் விஷால் ஃபிலிம் பேக்டரி தொடங்கினேன். 
 
ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏதாவது இருக்குமா?
 
ஏப்ரல் 11 கண்டிப்பா இந்தத் திரைப்படம் வெளிவரும். மிகப்பெரிய ரிலீஸ். என் படத்திலேயே இது மிகப்பெரிய ரிலீஸா இருக்கப் போகுது. இங்கே வெளியாகிற அதேநேரம் இந்துருடு என்ற பெயரில் தெலுங்கிலயும் ரிலீஸாகுது. 
உங்களுக்கும், லட்சுமிமேனனுக்குமான முத்தம்...?
 
இந்தப் படத்துல ரொம்ப பரபரப்பா பேசப்படுற இரண்டு காட்சிகள் ஏதோ ஜேம்ஸ்பாண்ட் படத்துல வர்ற முத்தம் மாதிரி இருக்கும்னு கண்டிப்பா எதிர்பார்க்காதீங்க. இது கதையோடு வர்ற விஷயம். இதை வச்சா பப்ளிசிட்டி கிடைக்கும் அதை பயன்படுத்திக்கலாம் அப்படீங்கிற நோக்கம் எல்லாம் இல்லை. எதுக்கு அந்த காட்சி வருதுங்கிறதுக்கான பதில் வெள்ளிக்கிழமை உங்களுக்கே தெரிஞ்சிடும். 
 
உங்க தயாரிப்பில் இது இரண்டாவது படம். தயாரிப்பாளர் என்கிற முறையில் படம் திருப்தியை தந்ததா?
 
திரு அற்புதமான பணியை செய்திருக்கிறார். தயாரிப்பாளர்களின் டார்லிங்னு சொல்லலாம். 65 நாள்ல இந்தப் படத்தை எடுத்து குடுத்திருக்கார். 65 நாள்ல எடுக்கிறது முக்கியமில்லை, குவாலிட்டியா எடுத்து தந்திருக்கார். அது எனக்கு பெருமையா இருக்கு.  
 
சென்சார் யுஏ சான்றிதழ் தந்திருக்கே?
 
மீண்டும் தணிக்கைக்கு அனுப்பியிருக்கோம். யு சான்றிதழ் வாங்க முயற்சி செய்றோம். அவர்கள் கேட்டுக் கொண்டால் தேவையற்ற காட்சிகள் நீக்கப்படும்.