செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Caston
Last Updated : சனி, 23 ஜனவரி 2016 (14:26 IST)

ஓவரா கெத்து காட்டுறேனோ...? - விஜய் சேதுபதி ஓபன் பேட்டி

விஜய் சேதுபதி நடித்திருக்கும் சேதுபதி விரைவில் திரைக்கு வருகிறது. நடிக்க வந்த நாலே நாளில் ஆக்ஷன் ஹீரோவாக ஆசைப்படுகிறவர்கள் மத்தியில் இன்னும் அடிவாங்குகிறவராகவே இருக்கிறார் விஜய் சேதுபதி. அவர் முறுக்கு மீசை வைத்து போலீஸ் கதையில் நடிக்க ஒப்புக் கொண்டதே ஒரு ஆச்சரியம்தான்.


 
 
சேதுபதி படத்தில் நடித்தது எப்படி?
 
இயக்குனர் அருண்குமார் என்னுடைய நீண்டகால நண்பர். பண்ணையாரும் பத்மினியும் படத்துக்குப் பிறகு அந்தப் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படம் இயக்க வேண்டும் என்று இந்த போலீஸ் கதையை தயார் செய்தார். அதை என்னிடம் சொல்லி நடிக்கக் கேட்டபோது நான் பயந்தேன்.
 
ஏன்...?
 
போலீஸ் வேடம் எனக்கு பொருத்தமாக இருக்குமா? ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்றெல்லாம் தயக்கமாக இருந்தது.
 
பிறகு எப்படி ஒத்துக் கொண்டீர்கள்?
 
நான் தயங்கின பிறகும் அருண்குமார் விடவில்லை. எனக்கு முறுக்கு மீசை வைத்து போட்டோஷுட் நடத்திப் பார்த்தார். அவருக்கு ஓரளவு நம்பிக்கை வந்தது. ஆனால், நான் நம்பிக்கை இல்லாமல்தான் ஷுட்டிங்கிற்குப் போனேன்.
 
உங்களுக்கு எப்போது  நம்பிக்கை வந்தது?
 
கேமராமேன் தினேஷ், பிரேமுல சூப்பரா வருது, மாஸா இருக்குன்னு சொல்லி நம்பிக்கை கொடுத்தார். அதற்குப் பிறகே நம்பிக்கையோடு நடித்தேன். இப்போது படத்தை பார்த்த பிறகு தான், நான் பயந்து ஒரு நல்ல வாய்ப்பை மிஸ் பண்ண இருந்தது தெரிகிறது. அருண்குமாருக்கும், தினேஷுக்கும் நன்றி.
 
சேதுபதி என்ற பெயர் எப்படி வந்தது?
 
படத்துக்கு பத்து தலைப்புகளை பரிசீலித்தோம். இறுதியில் சேதுபதி பொருத்தமாக இருப்பதாக சொன்னார்கள். அந்த தலைப்பும் என் தகுதிக்கு மிகுதியாகபட்டது. ஓவராக கெத்து காட்டுகிறேன் என்று நினைப்பார்களோ என்று தயங்கினேன். கதையின் மீதும் டைரக்டர் மீதும் எல்லோருக்கும் நம்பிக்கை இருந்தது.
 
பீட்சாவுக்குப் பிறகு ரம்யா நம்பீஸனுடன் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கிறீர்கள்...?
 
ரம்யா நம்பீசன் சிறந்த நடிகை. இரண்டு குழந்தைகள் தாயாக இதில் நடித்து இருக்கிறார்.
 
தயாரிப்பாளர் பற்றி...?
 
இப்போது படங்கள் தயாரிப்பது எளிதான காரியம் அல்ல. இந்த படத்தின் தயாரிப்பாளரிடமும் பணத்தை இழந்து விடக்கூடாது என்று பயமுறுத்தினேன். அவர் அதை பொருட்படுத்தாமல் கதையின் மீது இருந்த 
நம்பிக்கையில் இந்த படத்தை எடுத்து இருக்கிறார்.
 
படம் எப்படி வந்துள்ளது?
 
எதிர்பார்த்தபடி சிறப்பாக வந்துள்ளது.